இலங்கை அரசு 2009 இல் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்ததாகவும், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 100க்கும் மேற...
இலங்கை அரசு 2009 இல் ஒரு இலட்சத்து 46 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்களை இனப்படுகொலை செய்ததாகவும், செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட 100க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் இராணுவத்தால் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டவர்களுடையவை எனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
செம்மணியில் நடைபெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், 1995-ஆம் ஆண்டு சூரியக் கதிர் நடவடிக்கையைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டதாகவும், உணவு மற்றும் மருந்து தடைகள் ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
உள்ளக விசாரணைகள் தமிழர்களுக்கு நீதி வழங்காது எனவும், இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு ஐ.நா. பொதுச்சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
2012 முதல் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் முழுமையான சர்வதேச விசாரணையை வலியுறுத்தவில்லை எனவும், இதனால் 15 ஆண்டுகளாக நீதி கிடைக்கவில்லை எனவும் குற்றஞ்சாட்டினார்.
உள்ளக விசாரணைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பக்கச்சார்பற்ற சர்வதேச விசாரணைக்கு ஐ.நா. பொதுச்சபை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.


