இரணைதீவு எங்களுடைய மண். இங்கேதான் எங்களுடைய வாழ்வாதாரம் இருக்கிறது. இங்கேதான் நாங்கள் சுதந்திரமாக வாழலாம். எங்களுடைய மண்ணை விட்டு இனிமேல் ...
இரணைதீவு எங்களுடைய மண். இங்கேதான் எங்களுடைய வாழ்வாதாரம் இருக்கிறது. இங்கேதான் நாங்கள் சுதந்திரமாக வாழலாம். எங்களுடைய மண்ணை விட்டு இனிமேல் நாங்கள் எங்கும் செல்லப்போவதில்லை. என இரணைதீவு மக்கள் சூளுரை.
இன்று(14) இரணைதீவு மக்களைச் சந்திப்பதற்காக வடமாகாண முதலமைச்சர் தலமையிலான குழு இரணைதீவுக்குச் சென்றிருந்தது. இதன்போது மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறியிருக்கின்றனர்.
இங்கே மேலும் மக்கள் தெரிவித்ததாவது
1992ம் ஆண்டு போர் காரணமாக சொந்த நிலத்தை விட்டு இடம்பெயர்ந்தோம். பின்னர் இரணைமாதா நகரில் பல்வேறு இன்னல்களுக்கும் மத்தியிலும், போருக்கு மத்தியிலும் வாழ்ந்தோம்.
வாழ்வாதார ரீதியாக மோசமாக பாதிக்கப்பட்ட நிலையில் 26 வருடங்கள் வாழ்ந்து வந்தோம். இப்போது நாங்களாகவே வெள்ளைக் கொடிகளுடன் எங்களுடைய சொந்த நிலத்தில் மீள்குடியேறியுள்ளோம்.
எங்களுக்கு சட்டரீதியாக மீள்குடியேறுவதற்கான உரித்துக்களை பெற்றுக் கொடுக்கவேண்டும். பலரும் வருகிறார்கள் ஆனால் ஆக்கபூர்வமான பதிலை எவரும் கொடுக்கவில்லை. எங்களுக்கு சட்டரீதியாக மீள்குடியேற்ற அனுமதி வழங்கப்படவேண்டும்.
மேலும் எந்த சந்தர்ப்பத்திலும் எங்களை வெளியேற்றம் செய்யக்கூடாது. அவ்வாறு செய்தாலும் நாங்கள் வெளியேறப் போவதுமில்லை. மேலும் 26 வருடங்களுக்குப் பின்னர் மீள்குடியேறி பற்றைகளுக்குள், விஷ பூச்சிகளுக்கும், பாம்புகளுக்குமிடையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
எமக்கு உடனடியாக அரை நிரந்தர வீடுகள் வழங்கப்படவேண்டும். மேலும் குடிநீர், மலசலகூடம் போன்ற வசதிகளும் செய்து கொடுக்கப்படவேண்டும். என மக்கள் கேட்டுள்ளனர்.