சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் பேருந்து பயணியை மூர்க்கத்தனமாக தாக்கிய ஓட்டுனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உ...
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாகாணத்தில் பேருந்து பயணியை மூர்க்கத்தனமாக தாக்கிய ஓட்டுனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் உறுதி அளித்துள்ளது.

பெர்ன் மாகாணத்தின் பேருந்து சேவை தடம் எண் 101-ல் குறித்த சம்பவம் கடந்த டிசம்பர் மாதம் நடந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் வெளியான வீடியோ ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்த நிலையில், தற்போது தொடர்புடைய ஓட்டுனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க நிர்வாகம் உறுதியளித்துள்ளது.
பெர்ன் நகரத்தில் இருந்து Hinterkappelen செல்லும் தடம் எண் 101 பேருந்தில் சம்பவத்தன்று குறித்த பயணி ஏறியுள்ளார்.
பேருந்தில் ஓட்டுனரின் அருகாமையில் ஒரு சிறிய குப்பை தொட்டி ஒன்று இருந்துள்ளது.
அதில் குறித்த பேருந்து பயணி உணவு பொதிந்திருந்த உறையை இட்டுள்ளார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓட்டுனர், அந்த குப்பை தொட்டியானது பொதுவானது அல்ல எனவும், அந்த உறையை உடனடியாக எடுக்க வேண்டும் எனவும் பயணியிடம் நிர்பந்தித்துள்ளார்.
இந்த விவகாரம் இருவருக்கும் இடையே வாக்குவாதமாக மாறியது. ஒரு கட்டத்தில் குறித்த ஓட்டுனர் பேருந்து பயணியை மூர்க்கத்தனமாக எட்டி உதைத்துள்ளார்.
இந்த விவகாரத்தை உடனடியாக அந்த பேருந்து பயணி புகார் மூலம் பேருந்து நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஆனால் குறித்த புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிய வந்தது.
இந்த நிலையில், தொடர்புடைய ஓட்டுனர் ஒருவார கால விடுப்புக்கு பின்னர் மீண்டும் பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியானது.
இதனால் ஆத்திரம் அடைந்த பாதிக்கப்பட்ட பேருந்து பயணி மேலும் ஒரு புகாரை பேருந்து நிர்வாகத்திடம் அளித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த பேருந்து நிர்வாகம், குறித்த ஓட்டுனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக உறுதி அளித்துள்ளது.