வவுனியா வடக்கு பிரதேச சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை தவிசாளர் மீறி தன்னிச்சையாக செயற்படுவதனை வன்மையா...
வவுனியா வடக்கு பிரதேச சபை அமர்வில் தீர்மானிக்கப்பட்டு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயங்களை தவிசாளர் மீறி தன்னிச்சையாக செயற்படுவதனை வன்மையாக கண்டிப்பதாக சபை உறுப்பினர்கள் பத்து பேர் ஒன்றிணைந்து அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
வவுனியா வடக்கு பிரதேச சபையினால் இன்றைய தினம் அம்மாச்சி உணவகம்( வன்னி அறுசுவையகம் ) வைபவ ரீதியா திறந்து வைக்கப்பட்டுள்ளது.
சென்ற மாதம் நடைபெற்ற மாதாந்த சபை அமர்வில் இன்றைய நிகழ்வு தொடர்பில் சுமார் 30 நிமிடங்கள் விவாதிக்கப்பட்டு இறுதியில் பிரதம விருந்தினர்களாக மாவட்ட அரசாங்க அதிபரையும் வவுனியா வடக்கு பிரதேச செயலாளரையும் அழைப்பது என தீர்மானிக்கப்பட்டு சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இன்றைய நிகழ்விற்கு முன்னால் ஜனாதிபதியை அழைப்பது என தவிசாளரால் எமக்கு தெரிவிக்கவில்லை.
நேற்றைய தினம் எமக்கு அனுப்பிவைக்கப்பட்ட அழைப்பிதழில் ஊடாகவே அறிந்து கொண்டோம். அதனால் இன்றைய நிகழ்வை புறக்கணித்துள்ளோம்.
அத்தோடு இன்றைய தினம் எமக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடந்த மாத சபை அமர்வு கூட்டறிக்கையில் முன்னால் ஜனாதிபதியை அழைப்பது எனவும் சபை நிதியிலிருந்து 30000.00 ரூபாய் அதன் செலவீனங்களுக்காக ஒதுக்குவதாகவும் தீர்மானிக்கப்பட்டதாக உண்மைக்கு புறம்பாக தகவல்கள் திரிவுபடுத்தப்பட்டு அறிக்கையிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மேலும் சபை அமர்வுகளின் ஆரம்பத்தில் அம்மாச்சி உணவகம் என்றே எமக்கு தவிசாளரால் அறிமுகபடுத்தப்பட்டு பல மாதாந்த அறிக்கைகளிலும் எழுத்து மூலமாக எழுதப்பட்டும் இருக்கின்றது.இன்நிலையில் திடீரென அதன் பெயர்பலகை மாற்றம் பெற்றதனையும் எம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

தொடர்ச்சியாக தவிசாளர் அவர்கள் முன்னால் வவுனியா மாவட்ட வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின் ஆலோசனைகளின் அடிப்படையிலேயே செயற்பட்டு வருகின்றார். ஆகவே அவரின் ஆலோசனையின் அடிப்படையிலேயே அம்மாச்சி உணவகம் பெயர் பலகை மாற்றப்பட்டுள்ளது என்பதனை தெரிவித்துக்கொளவதோடு வன்மையான கண்டனத்தையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.




