யாழ் மாநகரசபை முதல்வரால் நடைமுறைப்படுத்தப்படும் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) திட்டத்திற்கு எதிராக இன்று நடத்தப்பட்ட போராட்டம் சற்று...
யாழ் மாநகரசபை முதல்வரால் நடைமுறைப்படுத்தப்படும் ஸ்மார்ட் லாம் போல் (SMART LAMP POLE) திட்டத்திற்கு எதிராக இன்று நடத்தப்பட்ட போராட்டம் சற்று முன்னர் முடிவுக்கு வந்தது.
யாழ் மாநகரசபை முதல்வரின் அலுவலக வாயிலில் போராட்டக்காரர்கள் உட்கார்ந்திருந்தபோதும், அவர்களை சந்திக்க மறுத்த முதல்வர் ஆனோல்ட் அலுவலகத்திற்குள் பதுங்கியிருந்தார்.
போராட்டக்காரர்கள் உள்நுழையாதவாறு பொலிஸ் பாதுகாப்பையும் கோரியிருந்தார்.
போராட்டக்காரர்களுடன் பேசிய ஆணையாளர் த.ஜெயசீலன், இந்த ஒப்பந்தத்தில் தான் கையொப்பமிடவில்லையென்றார்.
தற்போது மாநகரசபை அமர்வு ஆரம்பிக்கவுள்ளதால், அதற்கு வசதியாக போராட்டம் முடிக்கப்பட்டுள்ளது. மாநகரசபை அமர்வில் எதிர்க்கட்சிகள் 5 ஜி திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்குமென தெரிகிறது.
5 ஜிக்கு எதிராக யாழ் மாநகரசபை முன்றலில் போராட்டம்: அலுவலகத்திற்குள் பதுங்கினார் முதல்வர்!
யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதியில் 5ஜி அலைக்கற்றை கோபுரம் அமைக்கும் செயற்பாடுகளை நிறுத்தக் கோரி, மாநகர முதல்வரின் அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் அமர்வு இன்று (18) காலை 9 மணியளவில் ஆரம்பமாகவிருந்த நிலையில், பொது மக்கள் அணிதிரண்டு, மாநகர முதல்வரின் அலுவலகம் மற்றும் சபை வாயிலை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு உள்ளிட்ட பல்வேறு மக்கள் சார்ந்த அமைப்புக்கள், பொது மக்கள் எனப் பலரும், கண்டனத்தையும் எதிர்ப்பையும் வெளியிட்டனர்.
“யாழ்ப்பாணம் மாநகர ஆணையாளரின் ஒப்புதலின்றி, 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பது தொடர்பாக மாநகர முதல்வர் தன்னிச்சையாக செயற்படுகின்றார். பொது மக்களுக்கு 5ஜி அலைக்கற்றை தொடர்பான விழிப்புணர்வுகள் எதுவுமில்லை. போரால் பாதிக்கப்பட்ட எமக்கு 5ஜி அலைவரிசை கோபுரம் தேவையில்லை” என்று போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
அத்துடன் முதல்வருக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
போராட்டத்தின் போது, முதல்வர் தனது அறையில் இருந்ததுடன், போராட்டக்காரர்கள் வெளியில் வருமாறு அழைப்பு விடுத்த போதும், அவர் போராட்டக்காரர்களை சந்திக்க வெளியே வரவில்லை. பொலிசாரை பாதுகாப்பிற்கு அழைத்து, அறைக்குள்ளேயே பதுங்கியிருந்தார்.
யாழ்ப்பாணம் மாநகரப் பகுதிகளில் உள்ள பாடசாலைகள், கோவில்கள், போன்ற பிரதான இடங்களில் 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.
சுமார் 2 மணித்தியாலயங்கள் இந்த போராட்டம் தொடர்ந்ததுடன், இந்தப் போராட்டத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், அங்கஜன் இராமநாதன், பொ.ஐங்கரநேசன், கிந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பலர் சமூகம் அளித்திருந்தனர்.
போராட்டத்தில், அரசியல்வாதிகளை கலந்துகொள்ள வேண்டாமென்றும், பொது மக்கள் தெரிவித்ததுடன், 5ஜி அலைக்கற்றைக் கோபுரம் அமைப்பதற்கு வன்மையாக கண்டித்துள்ளதுடன், அலைவரிசை கோபுரம் அமைக்கும் பணியை நிறுத்தாவிடின், தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டோர் எச்சரிக்கைவிடுத்தனர்.




















