பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான சுதந்திர போராட்டத்தின் தலைமகனாக போற்றப்படும் மொனரவில கெப்பெட்டிப்பொல; இராஜசிங்க மன்னனின் உறவினனாகிய நா...
பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கெதிரான சுதந்திர போராட்டத்தின் தலைமகனாக போற்றப்படும் மொனரவில கெப்பெட்டிப்பொல; இராஜசிங்க மன்னனின் உறவினனாகிய நாயக்கர் வம்சத்தவனின் பெயரில் துரைசாமி என்ற ஒருவனை மத்திய மலைநாட்டின் அரசனாக முடிசூட்டியதன் மூலம் சிங்கள மக்களும் அவனை தமது மன்னனாக ஏற்றுக்கொள்ளும் நிலையை ஏற்படுத்தினான். இவனால் விதைக்கப்பட்ட இன – மொழி பேதமற்ற சுதேசிய உணர்வே, பிற்காலத்தில் இலங்கை சுதந்திர போராட்டத்தில் எடுத்தாளப்பட்டு, வெற்றியை ஈட்டிக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியது.

ஊரில் நிகழ்ந்த துரைசாமி நாயக்கனின் மகுடம் சூட்டுவிழாவில் கெப்பெட்டிபொல முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டமையைத் தொடர்ந்து, ஊவா – வெல்லஸ்ஸ பிராந்தியத்தில் காட்டுதர்பார் நடாத்திய மேஜர் மெக்டொனல்டுக்கும், புரட்சியை முறியடிக்கும் முயற்சியில் ஈடுபட்ட முதலமைச்சர் மொல்லிகொடைக்கும் முடிசூட்டு விழாவிலேயே மரணதண்டனை பிரகடனம் செய்யப்பட்டது.
இவ்விருவரையும் கொல்பவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியும், காணி நிலங்களும் வழங்கப்படுமென அரச கட்டளை பிறப்பிக்கப்பட்டது. மேலும் இலங்கையர்கள் ஒன்றுபட்டு வெள்ளையர்களை நாட்டை விட்டு விரட்டியடிக்க வேண்டுமெனவும் அங்கு தீர்மானிக்கப்பட்டது.
ஒவ்வொரு மாவட்டத்திலிருந்து வருகை தந்திருந்த திசாவைமார்களும் அவர்களின் ஊழியர்களும் காலந்தாழ்த்தாது உடனடியாக தத்தமது பிரதேசங்களுக்குச் செல்லவேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டது.
அவ்வாறு தத்தமது பிரதேசங்களுக்குச் சென்றடைந்தவுடன் கிளர்ச்சி நடவடிக்கைகளை எந்தெந்த வழிகளில் முன்னெடுக்கலாம் என்பது பற்றிய அறிவுறுத்தல்களும் அங்கு வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து திசாவைகளும் அதிகாரிகளும் கலைந்து சென்றனர்.
கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ள போராளிகளுக்கான உணவுத் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்புகளும் அந்தந்த திசாவை மார்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
மன்னின் பல்லக்கு மற்றும் அரசனின் ஆபரணங்களும் (ராஜாபரணங்கள்) பெறுமதியான உடையணிகளும் இரகசியமான இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. மறுநாள் மன்னன் ‘துரைசாமி’ கெப்பெட்டிபொல சகிதம் கொத்மலைக்குச் செல்வதாக திட்டம் வகுக்கப்பட்டது. இதுபற்றிய அறிவித்தலை சபாமண்டபத்தில் கூடியிருந்தவர்களின் முன்னிலையில் விடுத்த டொன் பெஸ்டியன் கொமசாரு அப்புசாமி, அங்கு குழுமியிருந்த தலைவர்களின் பெயர்களை அறிவிக்கலானான். அதன்பிரகாரம்,
ஊவா பிராந்தியம் – மொனவில கெப்பெட்டிபொல,
தங்கமுவ மொஹட்டால, ரம்புக்பொத்த மொஹட்டால, கொட்டகெலே மொஹாட்டால.
வலப்பனை – கிவுல்கெதற மொஹட்டால மற்றும் ஹத பத்கமுவே மொஹட்டால்.
சப்ரகமுவ – தெமோதர மொஹட்டால,
மாத்தளை – திப்பொட்டுவவே மொஹாட்டால,
எலந்தன்னை புஞ்சி ரால.
தும்பனை – தேதுனுபிட்டிய பொஹட்டால.
யட்டிநுவர, அரிஸ்பத்து, தும்பறை, ஹேவா ஹெட்ட, உடுநுவர, யட்டிநுவர
முடிசூட்டுவிழாவின் பின்னர் மன்னன் ‘துரைசாமி நாயக்க’னும் முதலமைச்சர் கெப்பெட்டிப் பொலையும் கொத்மலைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பாக அப்பயணத்தில் கலந்து கொண்ட டொன் பெஸ்டியன் அப்புகாமி தனது அறிக்கையில் இப்படிச் சொல்கிறார்.
“முதல் நாள் நாங்கள் கந்தப்பொல கோறளையில் தற்காலிக தரிப்பிடமொன்றுக்கு சமூகமளித்தோம். அங்கிருந்து மன்னரும் பரிவாரங்களும் ஆற்றைக் கடக்க வேண்டியிருந்தது. காட்டாறு வெள்ளம் பெருக்கெடுத்தோடியமையால் ஆற்றைக் கடப்பது சிரமமாக இருந்தது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் நாம் ஆற்றைக் கடந்தோம். அதன் பின்னர் உடுகிந்த பிரதேசத்தில் தெவகொட பத்தானையை நோக்கி நாம் விரைந்தோம். அங்கு தங்கியிருந்த நாட்களில் மன்னர் காலையும் மாலையும் மலர்சமர்ப்பண பூஜைகளில் ஈடுபட்டிருந்தார்” எனத் தெரிவித்துள்ளான்.
தமக்கு பணிபுரிவதற்காக வந்திருந்த ஊழியர்கள் அனுபவிக்கும் சிரமங்கள் குறித்து மன்னன் கவலை கொண்டான். தயாள சிந்தை கொண்டவனாகிய முதலமைச்சர் கெப்பெட்டிப் பொலை, அங்கு சமூகமளித்திருந்த பரிவாரங்களை இரு பிரிவுகளாக பிரித்து அவர்களை மாறி மாறி ஊழியம் புரியுமாறு கேட்டுக் கொண்டதோடு அவர்களுக்கான உணவுத்தேவைகளை தாராளமாக நிறைவேற்றினான். தம்மை நம்பியவர்களுக்கு தாம் புரிய வேண்டிய கைமாறுகளை செவ்வனே நிறைவேற்றுவதில் கெப்பெட்டிபொல மக்கள் மனம் அறிந்தவனாகத் திகழ்ந்தான்.
துரைசாமி நாயக்கர் மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் நடையுடை பாவனையுடன் காணப்பட்டான். அவனுக்கு அக்காலக் கட்டத்தில் மூன்று மனைவியரும் வாய்த்தனர். கொகுகும்புறே ரட்டே ரால என்னும் பிரதானியின் தங்கையையும், கவுடன் கெட்டிய ரட்டே ராலவின் தங்கையையும், கெஹெல்எல்ல விதானையின் தங்கையுமாக மூவரை மனைவியராகக் கொண்டான் ‘துரைசாமி’ இத்தகைய தகவல்கள் பெஸ்டியன் அப்புசாமியின் வாக்குமூலங்களாக ஜோன் டொயிலியின் குறிப்புகளில் காணப்பட்டன.
தேசத்தின் விடுதலை போராட்டத்திற்கு எதிராக செயல்பட்டவர்களினதும், ஆங்கிலேயருக்கு சார்பான போக்கினை கடைப்பிடித்தவர்களினதும் உயிர் மற்றும் சொத்துக்கள் அழிக்கப்பட வேண்டுமென தமது அணியினருக்கு கெப்பெட்டிப்பொல உத்தரவு பிறப்பித்தான், 1817ம் ஆண்டு நவம்பர் மாதம் 22ம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் கெப்பெட்டிப்பொலையின் கட்டளையின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் பற்றி விரிவாக எடுத்துக்கூறப்பட்டுள்ளது.
ஊவாவின் கிளர்ச்சித் தலைவனொருவனால் எமது படையின் (ஆங்கிலேய) சிப்பாய்கள் மூவர் கொல்லப்பட்டனர். இப்படுகொலையை புரிந்த ரட்டேராலவைப் பிடித்துத் தருபவர்களுக்கு பெறுமதிமிக்க சன்மானம் வழங்கப்படுமென ஊவா பிராந்திய அரச அதிபர் சோவர்ஸ் அறிவித்தான். சில தினங்களில் கொலையாளி சரணடைந்தான். தாம் கிளர்ச்சியில் ஈடுபட்டிருக்கவில்லையெனவும் தனக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளின் பேரிலேயே இக்கொலைகளை புரிந்ததாகவும் அவன் தெரிவித்திருந்தான்.
டொயிலியின் டயறியில் அண்மைக் காலமாக நிகழ்ந்துவரும் மோதல்களில் எமது இராணுவத்திற்கு பாரிய சதங்கள் ஏற்பட்டுள்ளன. எமது தாக்குதல்களுக்கு முகம் கொடுக்க முடியாமல் தப்பியோடுபவர்கள் சத திரும்ப வந்து நடத்தும் பதில் தாக்குதல்கள் குறித்து நினைக்கும் போதே மெய்சிலிர்க்கின்றது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் குறிப்புகளில் இருந்து ஆங்கிலேய படையினருக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதை அறிய முடிகிறது.
‘கெப்பெட்டிபொலையின் தாக்குதல் காரணமாக தெல்தெனிய பிரதேசத்திற்கு கேப்டன் ரிச் தலைமையில் படையணியொன்று அனுப்பி வைக்கப்பட்டது. உதவி வைத்திய அதிகாரியாகிய மெக்னல்ட் இப்படைப்பிரிவுக்கு தலைமை தாங்கினான். அவன் படையணிக்கு முன்பாக சுமார் பதினைந்து அடி தூரத்தில் சென்று கொண்டிருந்தான். மழைகாரணமாக நீண்ட அங்கியொன்றை அவன் அணிந்து கொள்ள முயற்சித்தான். அக்கணமே ஒரு
கூரிய அம்பு அவனது இடதுபக்க மார்பைத் துளைத்தது. அவன் மரணமடைந்து வீழ்ந்தான்.
இருபுறமும் காட்டுக்குள்ளும், புதர்களுக்குள்ளும் ஒளிந்திருந்த எதிரிகள் மெக்னல்ட் வீழ்ந்தமையையும் மரணமடைந்தமையையும் நேரடியாக கண்களால் கண்டு மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். பின்னர் எமது படையினருக்கு முகம் கொடுக்காது அவர்கள் ஓடி மறைந்து கொண்டனர்.
பன்னல முகாமிலிருந்து வெளியேறி லெப்டினண்ட் கேர்ணல் ஹுக் தலைமையிலான படையணியுடன் இணைவதற்காகச் சென்ற கென்னடிக்கும் அதே கதி ஏற்பட்டது. மலே மற்றும் ஆபிரிக்க கறுப்பர்களைக் கொண்ட படையணியொன்றுடன் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஊடுருவி பயணித்துக் கொண்டிருந்தபோது குன்றுகளிலும் கற்பாறைகளிலும் மறைந்திருந்தவர்கள் கென்னடி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவற்றில் ஒரு துப்பாக்கி வேட்டு கென்னடியை பதம்பார்த்தது. மற்றுமொரு வேட்டு கறுப்பின சிப்பாய் ஒருவன்மீது தீர்க்கப்பட்டது. எஞ்சியவர்கள் திப்பொட்டுகொடை முகாமை நோக்கி ஓடிச் சென்றனர்.” எனவும் டொயிலியின் டயறி தெரிவிக்கின்றது. நவீன ஆயுதங்களையும் திறமையான பயிற்சி பெற்ற போர்வீரர்களையும் கொண்ட ஐரோப்பிய பிரித்தானிய வீரர்கள் தொடர்ந்து கெப்பெட்டிபொலையின் தாக்குதல்களுக்கு இலக்காயினர்.
கெப்பெட்டிபொலையின் சுதந்திர போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்தவர்களில், பிந்தென்னை, தம்பானை ஆகிய வனப்பகுதிகளில் வாழ்ந்து கொண்டிருந்த ஆதிவாசிகளாகிய வேடர்கள் குறிப்பிடத்தக்கவர்களாகும். மேஜர் மெக்டொனால்ட் கிவுல்கெதற கிராமத்தை நெருங்கியபோது அங்கு புதர்களில் மறைந்திருந்த வேடர்கள் மூலம் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டன.
எதிர்பாராவிதமாக சரமாரியான அம்புத் தாக்குதல்கள் படையணியை பதம் பார்த்தன. வேடர்களின் குடிசைகளை ஆங்கிலேய படைகள் அழித்தபோதெல்லாம் உடனுக்குடன் குடில்களை அமைத்துக் கொண்டனர்.
ஓர் ஆதிவாதி குடும்பம் ஆங்கிலேயரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதுதான் மன்னன் துரைசாமியும், முதலமைச்சர் கெப்பெட்டிபொலையும் இருக்குமிடம் தெரியவந்தது.
தேசத்துரோக குற்றத்திற்காக கெப்பெட்டிபொலையை கைது செய்வதற்காக மெக்டொனால்ட் பெருமுயற்சிகளை மேற்கொண்டான். எனினும் கெப்பெட்டிபொலையை பாதுகாக்கும் நடவடிக்கையில் ஆதிவாசிகள் முழு மூச்சுடன் ஈடுபடலாயினர்.
தகவல் –தயாவன்ச ஜயகொடி
(சிங்ஹலே ஜாத்திக சட்டன்)
சி.கே. முருகேசு


