ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அவர்களுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் கண்டன அறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப...
ஸ்ரீலங்கா பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அவர்களுக்கு தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவையின் கண்டன அறிக்கை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் அவர்கள் கடந்த ஒருசில நாட்களுக்கு முன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் வரப்பு மீறிய தமிழர் தேசியத்திற்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்துள்ளார். குறிப்பாக நாம் தமிழர் கட்சியையும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளரான செந்தமிழன் சீமான் அவர்கள் மீதும் உண்மைக்குப் புறம்பான கருத்துக்களைக் கூறி கடுமையாக சாடியுள்ளார். திரு.யோகேஸ்வரனின் இந்தப் பேச்சானது 2009ற்குப் பின்னராக தமிழ்த் தேசிய அரசியலை பலப்படுத்துவதற்கு எதிரானது என்றே தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை கருதுகின்றது. காரணம் திரு.யோகேஸ்வரனின் இந்தப் பேச்சானது ஒடுக்கப்பட்ட எமது போராட்டத்தின் அரசியல் வடிவத்தை குழிதோண்டி புதைப்பதற்கு ஒப்பானதாகும். முழுமையாக தமிழத் தேசிய அரசியலை முன்னிறுத்தி ஈழத் தமிழருக்கு சாதகமான சர்வதேச அரசியலை முன்னிறுத்தும் நாம் தமிழர் கட்சி மீதான இந்த விமர்சனம் உலகத் தமிழர் அனைவரையும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது.
ஸ்ரீலங்கா அரசியலில் தோல்வி அடைந்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கூடாகவே இந்த ஊடக சந்திப்பு அரங்கேறியுள்ளது. திரு.யோகேஸ்வரனின் இந்தப் பேச்சுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் திரு.யோகேஸ்வரன் அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ் தேசிய பண்பாட்டு பேரவை கேட்டுக் கொள்வதுடன் உலகத் தமிழர்கள் சார்பாக கடும் கண்டங்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் திரு.யோகேஸ்வரன் அவர்கள் கிழக்கின் மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு எதையுமே உருப்படியாக செய்யாத நிலையில் தனது தகுதிக்கு அப்பாற் சென்று (கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதை) தமிழகத்தில் இருந்து தமிழ்த் தேசிய நலனுக்காக குரல் கொடுப்பவர்களை விமர்சிப்பது என்பது இவரது வக்கிர புத்தியையும், இவரின் கோமாளி அரசியலையும் பறைசாற்றுகின்றது.
திரு.யோகேஸ்வரன் அவர்கள் ஊடகங்கள் வாயிலாக மன்னிப்புக் கோரி மறுப்பறிக்கை விடத் தவறின் எம் மக்கள் இவரது எதிர்கால அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்பது துளியும் சந்தேகம் இல்லை.
நன்றி
எஸ் நிஷாந்தன்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
தமிழ் தேசிய பண்பாட்டுப் பேரவை


