சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களால் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று வாக...
சுமந்திரன் ஆயுதப் போராட்டம் தொடர்பில் தெரிவித்துள்ள கருத்துக்களால் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று வாக்கு கேட்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்தநிலையில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள பலர் தங்களுடைய கட்சிக்கும், சுமந்திரனின் கருத்துக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்கிற தோற்றப்பாட்டைக் காட்டி நல்ல பிள்ளைக்கு நடிக்கப் பார்க்கிறார்கள். நாங்கள் இந்த விடயத்தை மாத்திரம் நோக்காமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமாகவுள்ள சம்பந்தனும், சுமந்திரனும் கடந்த-11 ஆண்டுகளாக கூறிவரும் கருத்துக்களையும், சுமந்திரன் தற்போது கூறியுள்ள கருத்துக்களையும் எடுத்து நோக்கினால் புதிதாக எதுவுமே கிடையாது எனவும், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மையான கொள்கை தமிழ்த்தேசிய நீக்கமே எனத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உ றுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ்.கொக்குவிலுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நேற்றுத் திங்கட்கிழமை(11) பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஒரு சில நாட்களுக்கு முன்னர் சிங்கள ஊடகவியலாளர் சமூத்திகவிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உத்தியோகபூர்வப் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன் ஒரு பேட்டியொன்றை வழங்கியிருந்தார். அந்தப் பேட்டியில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சார்பாக அவர் பல விடயங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
குறிப்பாக ஆயுதப் போராட்டத்தை, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லையெனக் கூறியிருக்கிறார். மேலும் சிறிலங்காவின் தேசியக் கொடியைத் தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதேபோன்று சிறிலங்காவின் தேசிய கீதத்தைத் தான் முழுமையாக ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருக்கின்றார்.
எம்மைப் பொறுத்தவை நாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய நாள் முதல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் கொள்கை தொடர்பாக எங்களுடைய மக்களுக்குத் தெளிவுபடுத்தி வருகிறோம். அவர்கள் தங்களுடைய கொள்கையைக் கைவிட்டுப் புதிய பாதையொன்றைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் எனவும், ஆகவே, தமிழ்த்தேசிய அரசியலிலிருந்து அவர்கள் தடம் மாறிச் செல்கிறார்கள் எனவும் கடந்த- 11 வருடங்களாக நாம் தொடர்ச்சியாக கூறி வருகிறோம். இது தொடர்பான பல ஆதாரங்களையும் நாம் வெளிப்படுத்தி வந்துள்ளோம்.
சுமந்திரன் அரசியலுக்குள் நுழைந்த பின்னர் நடந்த- 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக தற்போது விக்னேஸ்வரனுடன் இணைந்து செயற்பட்டு வரும் பேராசிரியர் சிவநாதனின் ஏற்பாட்டில் விவாத நிகழ்வொன்று எனக்கும், சுமந்திரனுக்குமிடையில் திருமறைக் கலாமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தின் போது தான் ஆயுதப் போராட்டத்தை, தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அதர்மமாகத் தான் பார்க்கின்றேன் எனவும், தன்னைப் பொறுத்தவரை தர்மம் மட்டும் தான் வெல்லும். அதர்மம் தோற்கடிக்கப்படுமெனவும் சுமந்திரன் மிகவும் தெளிவாக கூறியிருந்தார்.
அன்று அரசியலுக்குப் புதியவராகவிருந்த சுமந்திரன் தமிழ்த்தேசிய அரசியலிலுள்ள நுணுக்கங்களை ஆழமாக விளங்கிக் கொள்ளாமல் இவ்வாறான கருத்துக்களைக் கூறியிருந்தார். அவருடைய கருத்துக்களுக்கு குறித்த விவாதத்தில் கலந்து கொண்டிருந்த மக்களிடமிருந்து கடும் எதிர்ப்புக்கள் வெளிவந்த நிலையில் அவர் இன்னும் ராங்கியாக யார் எதனைச் சொன்னாலும் தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லையெனவும், அது அதர்மம் எனவும், தர்மம் தான் வென்றதென மீண்டும் மீண்டும் கூறி வந்தார்.
இந்த நிலையில் தற்போதும் சுமந்திரன் அதே கருத்தையே சிங்கள ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் களமொன்றைக் காண வேண்டிய சூழலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள பலர் குறிப்பாகத் தமிழரசுக் கட்சிக்குள்ளேயே பலர் சுமந்திரன் தெரிவித்துள்ள கருத்துக்கள் தொடர்பாக கடும் விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்கள்.
நாங்கள் இந்த விடயத்தை மாத்திரம் நோக்காமல் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவமாகவுள்ள சம்பந்தனும், சுமந்திரனும் கடந்த-11 ஆண்டுகளாக கூறிவரும் கருத்துக்களையும், சுமந்திரன் தற்போது கூறியுள்ள கருத்துக்களையும் எடுத்து நோக்கினால் புதிதாக எதுவுமே கிடையாது.
போர் முடிவுக்கு வந்தவுடன் அப்போதைய ஜனாதிபதியான மகிந்த ராஜபக்ச பாராளுமன்றத்தைக் கூட்டிய போது தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை அழித்துப் போரை முடிவுக்கு கொண்டு வந்ததமைக்காக மகிந்த ராஐபக்சவுக்கும், அவருடைய அரசாங்கத்திற்கும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் பாராட்டுத் தெரிவித்திருந்தார்.
இதே சம்பந்தன் வட்டுக் கோட்டைத் தீர்மானத்தைத் தான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளவில்லை எனவும், தான் வட்டுக் கோட்டைக்கு தமிழரசுக் கட்சியினுடையதொரு உறுப்பினராகவிருந்தும் கூட வட்டுக் கோட்டைத் தீர்மானம் எடுக்கப்பட்ட நிகழ்வில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார். அத்துடன் இந்தத் தீர்மானத்தில் தனக்கு உடன்பாடில்லை எனவும் அவர் பலவிடங்களில் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு ஈவிரக்கமற்றதொரு பயங்கரவாத அமைப்பு என்கின்ற கருத்தைப் பல தடவைகள் சம்பந்தன் தெரிவித்துள்ளார். அதுமாத்திரமன்றி சிறிலங்காவின் சுதந்திர தினத்தை ஏற்றுக் கொள்ளும் வகையிலும் அவர் பல வருடங்கள் செயற்பட்டுள்ளார். அத்துடன் சிறிலங்காவின் தேசிய கீதத்தை முழுமையாக ஏற்றுத் தனியே சிங்களத்தில் மாத்திரம் பாடாமல் அதனுடைய தமிழாக்கத்தைத் தந்து எங்களைப் பாட விடுங்கள் எனவும் அவர் கூறியிருக்கிறார். இதன்மூலம் சுதந்திர தினத்தைக் கொண்டாட விரும்புகிறோம் என்று சாரப்படவே அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன.
எனவே, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், உத்தியோகபூர்வ பேச்சாளரும் கூறுகின்ற இவ்வாறான கருத்துக்கள் தான் கட்சி சார்பாகப் பதிவு செய்யப்படும் கருத்துக்கள்.
செல்வம் அடைக்கலநாதனோ, மாவை சேனாதிராசாவோ அல்லது சிறீதரனோ தெரிவிக்கும் கருத்துக்கள் கட்சி சார்பாக்ப் பதிவு செய்யப்படுவதில்லை.
இவ்வாறான கருத்துக்கள் கட்சி சார்பாக கடந்த-11 ஆண்டுகளாக வெளியிடப்பட்டு வருவதைத் தெரிந்து கொண்டு தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அங்கத்துவக் கட்சியினரும் சம்பந்தனையும், சுமந்திரனையும் தலைவராகவும், பேச்சாளராகவும் பல வருடங்களாக வைத்துள்ளார்கள்.
இவ்வாறான நிலையில் சுமந்திரன் தற்போது தெரிவித்துள்ள கருத்துக்களால் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் தமிழ்மக்கள் மத்தியில் நேரடியாகச் சென்று வாக்கு கேட்க முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் தான் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள பலரும் தங்களுடைய கட்சிக்கும், சுமந்திரனின் கருத்துக்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை என்கிற தோற்றப்பாட்டைக் காட்டி நல்ல பிள்ளைக்கு நடிக்கப் பார்க்கிறார்கள்.
கடந்த-11 ஆண்டுகளாகத் தமிழ்த்தேசிய அரசியலைத் தங்கள் பிடிக்குள் எடுத்து தமிழ்த்தேசிய அரசியலின் ஒரு அடையாளமாகத் தமிழீழத் தேசியத் தலைவரால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து கொண்டே தமிழர் அரசியலிலிருந்து தமிழ்த் தேசிய நீக்கத்தை செய்வதற்காக கூட்டமைப்பினர் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார்கள். இத்தகைய செயற்பாட்டைத் தமிழர் மட்டத்தில் மூடி மறைப்பதற்குத் தங்களுடைய கட்சியிலுள்ள ஏனைய உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்த்தேசியக் கருத்துக்களை மக்கள் மட்டத்தில் கதைக்கப் பண்ணி இதன் மூலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலுள்ள ஏனைய அனைவரும் சரியானவர்கள், இவர்கள் இருவர் மட்டும் தான் குழப்பமானவர்கள் என்கின்ற ஏமாற்றத்தை ஏற்படுத்தி தொடர்ச்சியாகத் தமிழ்மக்களுக்குத் தங்களது விசுவாசத்தைக் காட்டி வாக்களிக்கச் செய்தார்கள்.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உண்மையான கொள்கை தமிழ்த்தேசிய நீக்கம் என்பதைத் தமிழ்மக்கள் எப்போது விளங்கிக் கொண்டு அவர்களை முற்றுமுழுதாக நிராகரிக்க முன்வருகிறார்களோ அன்றுதான் தமிழ்த்தேசிய அரசியலின் உண்மைப் போராட்டத்தில் ஆக்கபூர்வமானதொரு பயணமொன்றை மேற்கொள்ள முடியும். எனவே, இவ்வாறான ஆழமான உண்மைகளை விளங்கிக் கொண்டு எமது மக்கள் எதிர்காலத்தில் செயற்பட வேண்டுமெனவும் நாம் தாழ்மையாக வேண்டிக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.