உலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப் படைக்கும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக பல நாடுகளை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவினை மட்டுமன்றி இன்று...
உலகம் முழுவதும் கொரோனா ஆட்டிப் படைக்கும் நிலையில் அதற்கு அடுத்தபடியாக பல நாடுகளை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவினை மட்டுமன்றி இன்று இலங்கை விவசாயிகளையும் கிலி கொள்ள வைத்துள்ளது. இதனால் வெட்டுக்கிளி தாக்கம் தொடர்பில் கிளிநொச்சியில் அமைந்துள்ள பிராந்திய விவசாய ஆராச்சி அபிவிருத்தி நிலைய பூச்சியியல் ஆராச்சியாளர் ஸ்ரீஸ்பரலிங்கம் - ராஜேஸ்கண்ணாவுடன் ஓர் செவ்வி.
(செவ்வி கண்டவர். ந.லோகதயாளன்.)
கேள்வி. தற்போது இந்தியாவில் அதிக தாக்கத்தையும் இலங்கையின் குருநாகல் மாவட்டத்திலும் கானப்படுவதாக கூறப்படும் வெட்டுக்கிளிகளின் ஆயுள் காலம் எவ்வளவு இதன் பாதிப்புக்கள் என்ன.
பதில்;- வெட்டுக்கிளிகளின் ஆயுள் காலம் என்பது 140 நாட்கள் தொடக்கம் 180 நாட்கள் மட்டுமே . அதனுடைய பாதிப்பு என்பது விவசாய உற்பத்திகொண்ட பல்வேறு பயிர்களையும் , மரங்களையும் விளைதானியங்களை சேதப்படுத்துவதாகவே இருக்கும் . அது மரக்கறி வகைகள் , பல மரங்கள் மற்றும் சிறுதாணியம் , நிலக்கடலை வரையும் இருக்கும். அதேநேரம் நேரடியாக மனிதப் பாதிப்பு கிடையாது.

கேள்வி :- இவ்வாறு பாதிப்பினை ஏற்படுத்தும் வெட்டுக்கிளியில் எத்தனை வகை இனங்கள் உண்டு , அவை அனைத்துமே பாதிப்பினை ஏற்படுத்துமா .
பதில் :- வெட்டுக்கிளிகளில் பல வகைகள் உலகில் வெட்டுக்கிளி அடங்கும் வர்ணத்தில் இனங்கள் 27 ஆயிரம் இனங்கள் உண்டு. இவற்றில் 10 வகையான வெட்டுக்கிளிகளே முக்கியத்துவம் வாய்ந்தவை . இவற்றில் 4 வகையான வெட்டுக்கிளிகளே பாரிய அளவான சேத்த்தை விளைவிக்கின்றன.
அதேநேரம் இந்தியாவில் தற்போது அதிக தாக்கத்தினை ஏற்படுத்தும் வகையான வெட்டுக்கிளிகள் இலங்கையில் சாதாரணமாக கானப்படுவதில்லை.
கேள்வி :- இலங்கையின் குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகமவில் இனம்கானப்பட்ட வெட்டுக்கிளி வகைகள் இந்தியாவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வெட்டுக்கிளியான பாலைவன வெட்டுக்கிளி இனத்தைச் சேர்ந்தவைதானா .
பதில் :- குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகமவில் தென்னம்பிள்ளைகளில் இனம்கானப்பட்ட வெட்டுக்கிளிகள் , மா , கொய்யா , சோளம் , கோப்பி , மரவள்ளி , கரும்பு , மிளகாய் , தேக்கு , கொக்கோ , எள்ளு , என்பவற்றையும் தாக்கும் இயல்புடையது . இருப்பினும் இவ்வாறு இனம்கானப்பட்ட வெட்டுக்கிளிகள் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. இவை மஞ்சள் புள்ளி வெட்டுக்கிளிகள் என அழைக்கப்படும் மற்றொருவகையானவை . இருப்பினும் அவையும் ஓரளவு அதிக பாதிப்பினை ஏற்படுத்தக்கூடியவைதான் என்பதனால் அவற்றினை கிருமிநாசினி ( மருந்து ) விசிறி அழிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கேள்வி:- இலங்கையில் தற்போதுதான் வெட்டுக்கிளி தொடர்பில் பேசப்படுகின்றதா அல்லது முன்பு எப்போதாவது இந்த நிலமை கானப்பட்டதா.
பதில்:- இலங்கை சுதந்திரம் அடைய முன்பே 1925 ஆம் ஆண்டு இலங்கையில் அதிக வெட்டுக்கிளிகள் தென்னம்பிள்ளையில் கானப்பட்டு அவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்தக் காலத்தில் கிருமி நாசினிகளும் இல்லாத காலம்.
கேள்வி:- வெட்டுக்கிளிகளை கிருமிநாசினி மூலம்தான் அழிக்க முடியுமா அல்லது தானாகவும் அழிவடையுமா .
பதில் :- வெட்டுக்கிளிகளின் எதிரியாக பறவைகள் ,, தவளை , கோழிகள் , பல்லி , ஓணான் என்பனவுண்டு . இவை தவிற பங்கசுக்கள் , பற்றாறியாக்கள் , நெமற்றோடுக்கள் ஆகியவற்றுடன் பங்வேறு பூச்சிகளும் இவற்றினை அழிப்பதோடு இவற்றிற்கும் அப்பால் கோழிக்கும் உணவாக்கப்படுகின்றது. இதனாலும் இதனால் இயற்கை சமநிலை பாதிப்படையாது தடுக்கப்படும்.
அதேநேரம் இவை அளவிற்கு அதிக அளவில் பெருகினால் அழிப்பதற்கான பூச்சி நாசினிகள் இலங்கையிலும் உண்டு.
கேள்வி :- வடக்கு மாகாணத்தில் எங்கு வெட்டுக்கிளி தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது. அவை ஆபத்தானவெட்டுக்கிளிகளா.
பதில் :- வடக்கே வவுனியாவில் கோவில்புளியங்குளம் , பகுதியில் கானப்படுகின்றது. இவை பாலைவன வெட்டுக்கிளி அல்ல. அதனால் விவசாயிகள் அச்சமடையத் தேவையில்லை.
கேள்வி :- ஆபத்தான வெட்டுக்கிளிகள் , ஆபத்து அற்ற வெட்டுக்கிளிகளை எவ்வாறு இனம் கான்பது .
பதில் :- வெட்டுக்கிளிகளில் நீண்ட கொம்பு வெட்டுகிளி , குறுகிய கொம்பு வெட்டுகிளி என இருவகையான வெட்டுக்கிளிகளே உண்டு. அதில் பெரிய கொம்பு வெட்டுகிளிகள் மனிதருக்கு நன்மை பயக்கும் என்பதனால் ஆபத்து கிடையாது. சிறிய கொம்பு வெட்டுக்கிளியே பயிர்களில் பாதிப்பினை ஏற்படுத்தும் . இவ்வாறு பாதிப்பினை உண்டுபன்னும் வெட்டுக்கிளிகளில் தலைப்பகுதி கறுமை நிறமாகவும் மஞ்சள் நிற குழாய் உருவான பட்டியை நெஞ்சுப் பகுதியிலும் கொண்டிருக்கும். வயிற்றுப்பகுதி கறுப்பு நிறமானதாகவும் பிரகாசமான சிவப்பு பட்டிகளை குறுக்காக கொண்டதாகவும் கானப்படும். முக்கியமாக இதன் சிறகுகள் மெல்லிய பச்சை நிறமானதாகவும் அதிக எண்ணிக்கை மஞ்சள் புள்ளிகள் கானப்படும்.
கேள்வி :- இந்தியாவில் தற்போது கானப்படும் மிகவும் ஆபத்தான பாலைவன வெட்டுக்கிளிகள் எங்கே எப்போது இனம் கானப்பட்டு எந்த வகையில் பரவியது.
பதில் :- இந்த மிகவும் ஆபத்தான வெட்டுக்கிளிகள் அதிக அளவில் முதலில் எதியோப்பியாவில் 2019ஆம் ஆண்டில் கானத் தொடங்கி அங்கிருந்து ஆபிரிக்காவின் சில நாடுகள் , ஈரான் , சவுதி அரேபியா வழியாக பாகிஸ்தானை அடைந்து. பின்பு அங்கிருந்து தற்போது இந்தியாவிற்கு வந்திருக்கலாம் என நம்ப்ப்படுகின்றது.
கேள்வி :- தற்போது பரவி வரும் ஆபத்தான பாலைவன வெட்டுக்கிளி உலகில் எவ்வாறு பரவுகின்றன. அவை இலங்கைக்கும் பரவும் சாத்தியம் உண்டா.
பதில் :- வெட்டுக்கிளிகள் பெரும்பாலும் நிலத்தாலேயே பரவக்கூடியவை. அந்த வகையில் அவை அனைத்தும் நிலத் தொடர்பு உள்ள நாடுகளின் ஊடாகவே பரவியுள்ளன. அதேநேரம் இந்தியாவில்கூட தற்போது மகாராஸ்திரா , குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பரவியுள்ளபோதும் தமிழ் நாட்டில் இன்னும் இனம்கானப்படவில்லை. அந்த வகையிலும் நாம் பயம்கொள்ளத் தேவையில்லை. எனினும் இலங்கை தனித் தீவாக இருப்பதனால் பாலைவன வெட்டுக்கிளிகளிடம் இருந்து பாதுகாக்கப்படலாம் என்றே கருதப்படுகின்றது.
கேள்வி :- ஒரு சாதாரண வெட்டுக்கிளிக்கும் ஆபத்தான வெட்டுக்கிளிகளிற்கும் பெருக்கத்தில் வித்தியாசம் உண்டா , அவை எந்த வேகத்தில் பெருகும் தன்மை கொண்டவை.
பதில் ;- சாதாரண வெட்டுக்கிளிகள் இயற்கை எதிரிகளினால் கட்டுப்படுத்தப்படுவதனால் அதிக சேதம் ஏற்படுவதில்லை.. ( பீடை) ஆனால் ஆபத்தான வெட்டுக்கிளிகள் இரு மாதங்களில் 100 தொடக்கம் 150 வரையான முட்டை இடும். அவை ஒரு கிழமை இடைவெளியில் தொடர்ந்து மூன்று தடவை இடும். ஒரு சதுர மீற்றர் பரப்பில் ஆயிரம் முட்டைகளையிடும். இம் முட்டைகள் உயர் வெப்பநிலை , நுண்அங்கிகள் மற்றும் பூச்சிகள் என்பனவற்றில் இருந்து பாதுகாக்கப்பட்ட நிலையில் பொட்டளங்களாக உறையினால் பாதுகாக்ப்ப்பட்ட நிலையில் நிலத்தின் கீழாக இடப்படுகின்றது.
கேள்வி ;- வெட்டுக்கிளிகளை எந்த வகைகளில் கட்டுப்படுத்தலாம் அல்லது அழிக்கலாம்.
பதில் :- இதனை இரசயானம் அற்ற முறையில் இவற்றினை இலகுவாக அழிக்கலாம். அதாவது வானில் கூட்டமாக வெட்டுக்கிளிகள் கானப்படும்போது ஒலி எழுப்புவதன் மூலம் நிலத்தை வந்தடைவதனை தடுக்கலாம். அடுத்தபடியாக
நிலத்தில் கூட்டமாக அனங்குகள் அணிவகுத்து செல்லும்போது அவற்றின் மீது காய்ந்த புற்கள் , சருகுகள் போன்றவற்றினை எரிப்பதன் மூலம் அழிக்க முடியும். இவை தவிர பாரிய வலைகளை கட்டி விடுவதன் மூலம் நிறைஉடலிகள் தரையை வந்தடைவதனை தடுக்கலாம். அதேபோல் 10 மில்லி லீற்றர் வேப்பெண்ணையை 15 லீற்றர் நீரில் சிறிதளவு சவர்க்கார நீரும் சேர்த்து கரைத்து பயிர்களில் தெளிப்பதன் மூலமும் விரட்டலாம்.
உயிரியல் பீடை கொள்ளியான மெற்றாரைசியம் என்ற பங்கசுவின் வித்திகளின் 75 கிராமை 15 லீற்றர் நீரில் கரைத்து அணங்குகளின்மீது விசுறுவதன் மூலம் அவற்றினை அழிக்கலாம். உருளைகளைப் பயன்படுத்தி பயிர்களிற்கு இடையேயும் , பயிரிடப்படாத பகுதிகளிலும் உருட்டிச் செல்வதன் மூலம் இவற்றை நசித்து அழிக்கலாம்.
வயலைச் சூழவுள்ள பன்படுத்தப்படாத நிலங்களை முள் கலப்பைகொண்டு உழுது விடுதல். இவ்வாறான முறைகளில் கட்டுப்படுத்தியும் முடியாத நிலமை கானப்பட்டால் மட்டுமே பின்வரும் பூச்சி நாசினிகளை சிபார்சு செய்யப்பட்ட அளவில் பயன்படுத்த முடியும். அதாவது டயசினோன் குறுநல் , காபோசல்பான் , டெல்றாமெத்திறின் , சிப்றோனில் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.
இதில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காலை 7 மணிமுதல் 10 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7 மணி வரையான காலப்பகுதியில் மட்டுமே கிருமி நாசினி விசிறப்பட வேண்டும். அதேபோன்று அறுவடைக்கு முந்திய கால இடைவெளியும் பேனப்பட வேண்டும். அதேபோல் மருந்து விசிறும்போது பாதுகாப்பு உடை அணிவது முக்கியமானது.