முற்றும் மனக் கற்பனையில் முடி சிலுப்பி முன்னேறும் முகத் தோல்போர்த்த -நவீன கற்பனைக் காவியர்கள் மீட்டு ஒரு பூங்காவைத் தமக்கென ...
முற்றும் மனக் கற்பனையில்
முடி சிலுப்பி முன்னேறும்
முகத் தோல்போர்த்த -நவீன
கற்பனைக் காவியர்கள்
மீட்டு ஒரு பூங்காவைத் தமக்கென
பரிசளிப்பர் என நினைத்து,
வெயில் குளித்து,
உடல் வருத்தி சேமித்தவற்றை
வெள்ளாந்தியாய் செலவளித்து,
வேடிக்கை காட்டியோரை
வாழ வைத்த இனம்
குடல் சுருங்கி வாடும்
ஊரடக்க வேளையிலும்
ஆள ஒரு அறிவார்ந்த சிந்தனையை
சூடிக்கொள்ள முடியாது
சிதைவடைந்து போனதையோ!
மூளை சலவைக்குள் மூழ்கி -தம்சுய
மானம் மரியாதை தனை எல்லாம்
இழந்து,
ஈனர் சதிக்குள்ளே இடர்பட்டு,
கற்பனைச் சந்ததியை ஈன்றெடுத்து வீதியெங்கும்
மதுவோடும் மனம் மயங்கும்
துர் விதியோடும் தள்ளாடி,
நுண்ணியதாய் மெல்ல வந்து கொல்லுமொரு கிருமிக்கும் வீரம் காட்டி
நையாண்டியாய் சாகுதையோ!!
மூளைகள் விழிப்பதெப்போ?
முன்னய வீரந்தான் பிறப்பதெப்போ?
வீரமுடன் மதியூகமும் கொண்ட இனம்
அறியாமை இருள் போர்த்து
அவலச்சாவில் மிதக்கிறதே!
ஆறறிவை மூடிவிட்டு
அவஸ்தை தான் கொள்கிறதே.
வேடிக்கை காட்டி நன்றாய்
வேதனத்தை உறிஞ்சியவர்
மாடமாளிகையில் மலர்ந்து தான்
இருக்கின்றார்.
வேடிக்கை பார்த்தவர் தான்
வேடிக்கைப் பொருளானார்.
கூர்ப்பு விதி குறுகி தன்
ஆரம்ப தடம் புகுந்து- மீண்டும்
தாவும் இனத்தைத்தான் பிறப்பித்ததோ?
Latha Kanthaiya
(வன்னிமகள் எஸ்.கே. சஞ்சிகா)