பொது இடங்களில் நடமாடும் போது கட்டாயமாக முககவசம் அணியுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் வேண்டுகோள் விடு...
பொது இடங்களில் நடமாடும் போது கட்டாயமாக முககவசம் அணியுமாறு வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அறிக்கை ஒன்றை வௌியிட்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நமது நாட்டில் கொரோனா நோய் தொடர்பான அபாயம் தொடர்ந்தும் இருப்பதால் மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே செல்லும் பொழுது முகக்கவசம் அணிவதும், குறைந்தது இருவருக்கிடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவதும், சரியான முறையில் கைகளை அடிக்கடி கழுவுவதும் பொதுச் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளாக கைக்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் தற்போது நமது நாட்டில் மக்கள் வீட்டிற்கு வெளியில் செல்லும் போதும், பொது இடங்கள் மற்றும் பொது நிகழ்வுகளுக்கு வருகை தரும் பொழுதும், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு முகக் கவசம் அணியாது நடமாடுபவர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் 14 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்படுவார்களென ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருப்பினும் வடமாகாணத்தின் பல இடங்களில் பொதுமக்கள் முகக் கவசம் அணியாது நடமாடுவது அவதானிக்கப்பட்டு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இனிவரும் நாட்களில் மிகவும் இறுக்கமாக கண்காணிக்கப்பட்டு சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.