நாடாளுமன்றம் கூடி ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தல...
நாடாளுமன்றம் கூடி ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
நேற்று மாலை வடமராட்சி, மாலுசந்தி, மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் நடந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரசார கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் இதனை தெரிவித்தார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலானது அதிகம் முக்கியத்துவம் பெறுகிறது. நாம் மாத்திரமல்ல சர்வதேச சமூகமும் இவற்றை கண்காணிக்கிறது.
தற்போது நாட்டில் உள்ள அரசியல் சாசனமும் அதற்கு முதல் இருந்த அரசியல் சாசனங்களும் அனைத்து மக்களின் விருப்பத்தையும் பெற்றதல்ல. தமிழ் மக்கள் இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தப்படும் நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். சர்வதேசம் எமக்கு பின்னால் நிற்கின்றது.
கடந்த 70 வருடமாக நாம் ஏற்றுக்கொள்கின்ற அரசியலமைப்பை கொண்டு வருவதற்கு முடிந்தளவு முயற்சி செய்துள்ளோம்.
தற்போதுள்ள அரசியல் சாசனம் எமக்குரியதல்ல. எமக்கான ஆட்சி முறை தொடர்பில் அது கூறவில்லை. கடந்த கால அரசியல் சாசனங்களை தமிழ் தலைவர்கள் நிராகரித்தே வந்தார்கள்.
இலங்கையில் தமிழ், சிங்கள, முஸ்லீம் என பல்லின மக்களும் வாழ்கின்றனர். அவர்களுக்கென சில தனித்துவமான பண்புகள் காணப்படுகின்றன. வடக்கு கிழக்கை இணைத்து அதிகாரப்பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது.
தற்போதைய நிலைமையில் ஜனாதிபதி முறைமை, நாடாளுமன்ற முறைமை, தேசிய இனப்பிரச்சினைக்குரிய தீர்வு போன்ற விடயங்களிற்கே அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
நாட்டில் கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரவு செய்யப்பட்டு இரு நாட்களுக்குள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று இந்திய பிரதமர் தனது தூதர் மூலம் வலியுறுத்தினார்.
யுத்தம் நிறைவடைந்த பின்னர் கருத்து தெரிவித்த மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களுக்கான அதிகாரப்பகிர்வு விடயம் தொடர்பில் பேசினார். ஆனால் அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
நாடாளுமன்றம் கூடி ஒரு வருடத்திற்குள் புதிய அரசியலமைப்பை உருவாக்கி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் .
அரசியல் சாசனம் தற்போது நாட்டில் இல்லை. நாடு அரசியல் சாசனம் இல்லாமல் ஆளப்படுகிறது. இதனை மாற்றியமைக்க வேண்டும். இவற்றை நிறைவேற்ற பலம் வாய்ந்த அணி நாடாளுமன்றம் செல்ல வேண்டும். யாழ்ப்பாணம் நூற்றுக்கு தொன்னூற்று ஒன்பது வீதம் தமிழ் மக்களை கொண்ட பகுதியாகும். இங்குள்ள ஏழு ஆசனங்களையும் நாம் வெல்லவேண்டும். எம்மால் வெல்ல முடியும். அதற்காக போதிய பிரசாரம் செய்து மக்களை தெளிவூட்ட வேண்டும். என்றும் தெரிவித்தார்.