பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி ...
பாரத லக்ஷ்மன் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் கோரிக்கை விடுத்து அரசாங்க தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மனுவில் கையெழுத்திட்டுள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட ஐந்து நபர்களுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தண்டனை வழங்கியது.
2011-ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தினமன்று கொழும்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவை சுட்டுக் கொலை செய்ததாக குற்றம் சாட்டி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட12 நபர்களுக்கு எதிராக சட்ட மா அதிபர் வழக்கு தாக்கல் செய்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏழு சந்தேக நபர்களை விடுதலை செய்ய முதலில் தீர்மானித்தனர். அதன் பின்னர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்பட ஐந்து பேரும் சந்தேகத்திற்கு இடமின்றி குற்றவாளிகளென்று இரண்டு நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதன்படி பெரும்பான்மை நீதிபதிகளின் தீர்மானத்திற்கு அமைய சந்தேக நபர்கள் ஐந்து பேருக்கும் 2016 ம் ஆண்டு மரண தண்டனை வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.