மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியா...
மும்பை இந்தியன்ஸ் மற்றும் டில்லி கெப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் அதிரடியாக வெற்றிப் பெற்று 5 ஆவது முறையாக கிண்ணத்தை வென்று மும்பை அணி சாதனை படைத்துள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற டெல்லி கெப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுக்களை இழந்து 156 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் அணித்தலைவர் ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
6 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
அதேபோல், 4 நான்கு ஓட்டங்கள் மற்றும் 2 ஆறு ஓட்டங்கள் அடங்களாக ரிஷாப் பான்ட் 56 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் டிரன்ட் போல்ட் 3 விக்கெட்டுக்களையும் நதன் கோல்டர் நைல் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு 157 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 18.4 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
அவ்வணி சார்பாக அணித்தலைவர் ரோஹித் சர்மா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 68 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.
51 பந்துகளுக்கு முகங்கொடுத்து 4 ஆறு ஓட்டங்கள் மற்றும் 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
மேலும், டீ கொக் 22 ஓட்டங்களையும், இஷான் கிஷான் ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களையும், சூரியகுமார் யாதவ் 19 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
டில்லி அணி சார்பில் அன்றிச் நோயே அதிகபட்சமாக இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
அதன்படி, டில்லி கெப்பிடல்ஸ் அணியை 5 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் கிண்ணத்தை 5 ஆவது முறையாக கைப்பற்றி சாதனை படைத்துள்ளது.