நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தோர் தற்போது தங்கியிருக்கும் பிரதேச சுகாத...
நவம்பர் 7ஆம் திகதி சனிக்கிழமைக்குப் பின்னர் வேறு மாகாணங்களிலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வருகை தந்தோர் தற்போது தங்கியிருக்கும் பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பதிவு செய்யவேண்டும் என்று மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இவர்களை வீட்டில் சுயதனிமைப்படுத்துதலுக்கு உட்படுத்துவது தொடர்பான முடிவுகளை அவர்கள் புறப்பட்டு வந்த இருந்து வந்த பிரதேசங்களின் நோய் நிலமைகளின் அபாயங்களைப் பொறுத்து சுகாதார மருத்துவ அதிகாரிகள் தீர்மானிப்பர்.
இவ்வாறு வேறு மாகாணங்களில் இருந்து தமது பிரதேசங்களுக்கு வருகை தந்தோர் பற்றிய தகவல்களை அவர்களோ அல்லது பொதுமக்களோ தமது பிரிவு சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுச் சுகாதார பரிசோதகர், குடும்பநல உத்தியோகத்தர் அல்லது வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24மணிநேர அவசர அழைப்பிலுள்ள 0212226666 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு உங்களது விவரங்களை அறியத்தர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
அத்துடன் வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து அரச, அரச சார்பற்ற, தனியார் நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் தமது நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களது விவரங்களை வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்பாக பிரதேச சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த அறிவிப்பை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு நிறுவனமும் தமது ஊழியர்களில் மூத்த நிலையிலுள்ள ஒருவரை நிறுவனத்திற்கான இணைப்பாளராக நியமனம் செய்து அவரது விவரங்களையும் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.