வடக்கு, கிழக்கு மாகாணங்களில், உழவர் சந்தையை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர்...
வடக்கு, கிழக்கு மாகாணங்களில், உழவர் சந்தையை உருவாக்குவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் நாயகம் எம்.கே.சிவாஜிலிங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வடக்கு, கிழக்கு விவசாயிகள் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே எம்.கே.சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
யுத்தத்திற்கு பின்னர் எங்களுடைய மக்கள் பல்வேறு வகையிலும் கஸ்டப்பட்டவண்ணம் இருக்கின்றார்கள். பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்தது போல பல்வேறு சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டு இருக்கின்றன. இதிலே மிக முக்கியமாக, விளைபொருட்களை அதாவது மரக்கறி சந்தைகளுக்கு எடுத்துவரப்படுகின்ற விளைபொருட்கள் இங்கு வடக்கு கிழக்கிலே எங்களுடைய விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு ஒவ்வொரு சந்தையில்லும் பத்து வீத கழிவுகள் ஆகின்றது.
இது மிகவும் அநியாயமான மோசமான நடவடிக்கை. உற்பத்தி செய்பவரை விட இடைத் தரகர்களும் ஏனைய வியாபாரிகளும் கொள்ளை லாபம் அடிக்கும் ஒரு நடவடிக்கை.அவர்கள் என்ன நியாயம் சொன்னாலும் அது ஏற்றுக்கொள்ளப்பட முடியாது. இந்த விடையத்திலே சுமுகமாக தீர்வு காண வேண்டியவர்கள் விவசாயிகள் மாத்திரம் அல்ல.
உள்ளூராட்சி மண்றங்களும், உள்ளூராட்சி மண்றங்களின் தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்நிற்க கூடிய மாகாண ஆளுநர், அரசாங்க அதிபர்கள், உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சிமண்ற தலைவர்களுடைய பொறுப்பு. உள்ளூராட்சி மண்றங்களின் செயலாளர்கள், ஆணையாளர் ஊடாக இதனை செயல்படுத்த வேண்டும்.
அதைவிட இன்னுமொரு கேள்வியினையும் கேட்க விரும்புகின்றோம் அதாவது தம்புள்ளையில் இருது வரும் மரக்கறிகளுக்கு பத்து வீத கழிவு இல்லை . தம்புள்ளையில் இருந்து வந்தால் ஒரு நீதியும் எங்களுடைய விவசாயிகளுக்கு பத்து வீத கழிவு என்றால் இது மிகவும் கொடுமையான ஒரு நடைமுறை.இந்த நடவடிக்கையில் இருந்து விலக்களிப்பதற்கு ஏற்கனவே பல உள்ளூராட்சி மன்றங்கள் தீர்மானம் எடுத்தாலும் அது அமுல்ப்படுத்தப்படுவதில்லை.
வடக்கு கிழக்கு மாகாணங்களிலே இந்த நடைமுறையை உடனடியாக அமுல்ப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட உள்ளூராட்சி மண்றங்களின் தலைவர்கள் நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.
அவ்வாறு எடுக்கவில்லை என்றால் மக்கள் மிகப்பெரும் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இவ்வாறான போராட்டங்களுக்கு எங்களை தலைமைதாங்கும் நிலைக்கு தள்ளாதீர்கள். நாங்கள் உங்களைப் பார்த்து மிகவும் பணிவாக கேட்கக்கூடிய விடயம். உடனடியாக செய்வதிலே உங்களுக்கு பிரச்சினை இருந்தால் உழவர் சந்தை என்பதை அறிவித்து, ஒரு மைதானத்தை ஒதுக்கி அங்கு நேரடியாக விவசாயிகள் கொண்டுவந்து விற்பனை செய்யும் நடைமுறை தென் இலங்கையில் இருக்கின்றது, நீண்ட வருடங்களுக்கு முன்பு தமிழ் நாட்டில் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருனாநிதியால் உழவர் சந்தை உருவாக்கப்பட்டிருந்தது.
இடைத்தரகர்கள் இல்லாமல் வாரத்தில் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் இதனை அமுல்ப்படுத்தும் பொழுது மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நன்மை ஏற்படும். எனவே உடனடியாக இதனை அமுல்ப்படுத்த வேண்டும்.
வெறுமனே கூடியிருந்து ஆளுநர், அரசாங்க அதிபர்கள், உள்ளூராட்சி திணைக்கள ஆணையாளர் , பிராந்திய உதவி ஆணையாளர்கள் மற்றும் உள்ளூராட்சி மண்ற தலைவர்கள் வெறுமனே பத்தோடு பதினொன்றாக இதனை பார்க்காமல் உடனடியாக, ஆகக்குறைந்தது அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து இதனை நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என தெரிவித்துள்ளார்.