ஜனாதிபதி பதவியை, தான் சிறப்புரிமையாக கருதாது, தனக்கான பொறுப்பாக கருதியே செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார். நாட்ட...
ஜனாதிபதி பதவியை, தான் சிறப்புரிமையாக கருதாது, தனக்கான பொறுப்பாக கருதியே செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
நாட்டு மக்கள் இன்று (18) ஆற்றிய விசேட உரையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஜனாதிபதிக்கு கிடைக்க வேண்டிய சிறப்புரிமைகளை பெற்றுக்கொள்ளாது, தான் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளினாலேயே தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டதாகவும், ஜனாதிபதி இன்று தனது உரையில் மீண்டும் தெரிவித்திருந்தார்.
அத்துடன், தொல்பொருட்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்று ஸ்தாபிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
வெளிநாட்டு மக்களின் கீழ் இயங்கி, உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் யுகம் நிறைவடைந்துள்ளதாக கூறிய அவர், தற்போது சர்வதேச நாடுகளின் கௌரத்தை பெற்று இலங்கை முன்னோக்கி நகர்வதாகவும் ஜனாதிபதி கூறினார்.
அத்துடன், பொலிஸ் மற்றும் நீதிமன்றம் ஆகியவற்றுக்கு அழுத்தங்களை கொடுக்காது, அந்த நிறுவனங்களை சுயாதீனமாக இயங்குவதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
4000 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் பெருந்தோட்ட பகுதிகளில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், திறந்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார்.
தொழில்நுட்ப கல்வியை வலுப்படுத்தவும் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.
19ஆவது திருத்தத்தினால் ஏற்பட்ட குழப்பகர நிலைமை, 20ஆவது திருத்தத்தின் ஊடாக சரி செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
எனினும், விவாதத்திற்கு உட்படுத்தப்படும் பல விடயங்கள் இன்னும் காணப்படுகின்றமையினால், புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு, அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டார்.
யுத்தத்தை நிறைவு செய்ய முடியாது என எண்ணிய நிலையில், யுத்தத்தை நிறைவு செய்ய தம்மால் முடிந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தை நிறைவு செய்ய முடிந்த தமக்கு, பொருளாதார பிரச்சினைகளையும் முடிவுக்கு கொண்டு வர முடியும் என அவர் குறிப்பிட்டார்.