பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழ விரும்புவதாலேயே மக்கள் எம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெ...
பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழ விரும்புவதாலேயே மக்கள் எம்மை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவந்தார்கள் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்காவை இன்று திறந்துவைத்து உரையாற்றும்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ஒரு வேலையை ஆரம்பித்து, அதனை முடிப்பதானது உண்மையில் மகிழ்ச்சியான ஒரு விடயமாகும்.
இன்று மன்னாரில் அனைத்து வீதிகளும் கார்ப்பெட் போடப்படுகின்றன. மடு வீதியை புனரமைத்து நான் வருகைத் தரும்போது, பிரபாகரனிடம் நான் இங்கு வர அனுமதியளிக்க வேண்டும் என்று கூறினார்கள்.
மத வழிபாட்டில் ஈடுபடக்கூட, பயங்கரவாதிகளிடம் அனுமதிக் கோர வேண்டியிருந்தது. அன்று நான், பயங்கரவாதத்தை ஒழித்துதான், மடு தேவாலயத்திற்கு வருவேன் என்று உறுதியளித்தேன்.
அதேபோன்று, கிராமங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதும் பல்வேறு சவால்களுக்கு மத்தியிலேயே நாம் மேற்கொண்டோம்.எதிரணியினரின் விமர்சிப்புக்கு மத்தியிலும்தான் நாம் இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டோம்.
2015இல் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்தால், சரியான வேலைத்திட்டமொன்று இருக்கவில்லை. இதனால்தான் மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் எம்மை பழிவாங்கினார்கள். பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாத ஒரு நாட்டில் வாழவே மக்கள் விரும்புவார்கள். இதனாலேயே எம்மை மீண்டும் ஆட்சிக்கு மக்கள் கொண்டுவந்தார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.