யுத்தத்தின் போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்றுநோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடி...
யுத்தத்தின் போது நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடர்ந்ததைப் போலவே கொவிட் தொற்றுநோயையும் எதிர்கொண்டு நாட்டின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி தொடரும் என்று கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (2021.02.16) நம்பிக்கை வெளியிட்டார்.
வடமேல் மாகாண கால்வாய் ('மஹ எல') திட்டத்தின் மஹகித்துலா மற்றும் மஹகிருல நீர்த்தேக்கங்களின் கட்டுமானப் பணிகளை யாபஹுவ இருதெனியாய, கொன்கஹ சந்தியில் ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
மஹவெலி நீரை வடமேற்கிற்கு கொண்டு வரும் இந்த பாரிய நீர்ப்பாசன திட்டத்தின் நினைவு பலகை கௌரவ பிரதமரினால் திறந்து வைக்கப்பட்டது.
வடமேல் மாகாண கால்வாய் திட்டத்தின் கீழ், 90 கி.மீ நீளமுள்ள கால்வாய், 25 மீட்டர் உயரமான அணையுடனான மஹகிருல மற்றும் மஹகிதுல இரண்டு நீர்த்தேக்கங்கள், ஐந்து சுரங்கவழி நீர் மார்க்கங்கள் ஊடாக கலேவெல, பொல்பிதிகம, மஹவ மற்றும் எஹெடுவௌ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவை அண்மித்ததாக ஏழு பெரிய குளங்களுக்கும், 350 சிறிய குளங்களுக்கும் இரு பருவங்களிலும் சாகுபடி செய்வதற்கு தேவையான நீரை 2024ஆம் ஆண்டளவில் பெற்றுக் கொடுக்க எதிர்பார்க்கப்படுகிறது.
திட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 105,000 ஏக்கர் அடி நீர் குருநாகல் மாவட்டத்தின் வடக்கு பகுதிக்கு திருப்பி விடப்பட்டு சிறு மற்றும் பெரும் ஆகிய இரு போகங்களிலும் சாகுபடிக்கு 13,000 ஹெக்டேர் விளைநிலங்களுக்கு நீர்ப்பாசனத்துறை நீரை பெற்றுக் கொடுத்து, தற்போதைய சிறுநீரக நோய்க்கு காரணமாக விளங்கும் குடிநீர் பிரச்சினையை குறைப்பதற்கு இலக்கு வைக்கப்பட்ட பிரதேசங்களுக்கு ஆண்டுதோறும் 8100 ஏக்கர் அடி தண்ணீர் வழங்கப்படும்.
3 ஆண்டுகள் என்ற குறுகிய காலத்திற்குள் பணிகளை நிறைவுசெய்வதற்கு எதிர்பார்க்கப்படும் இந்த திட்டத்திற்கான ஒப்பந்த செலவு ரூபாய் 10.8 பில்லியன் ஆகும்.
சுமார் ஒரு மாதத்திற்கு முன்னர் கௌரவ பிரதமர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பிரதேசவாசிகளின் காணி உரிமை பிரச்சினையை தீர்ப்பதை குறிக்கும் வகையில் கௌரவ பிரதமரினால் காணி உரிமங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சரத் குமார, ஏ.எம்.ஜயரத்ன பண்டா, ஜே.எம்.தயாரத்ன, மற்றும் ஜே.எம்.ஐ.சந்தமாலி தயாரத்ன, கே.யசோ ஆகியோர் கௌரவ பிரதமரிடமிருந்து காணி உரிமப் பத்திரங்களை பெற்றுக் கொண்டனர்.
அங்கு உரையாற்றிய கௌரவ பிரதமரின் முழுமையான உரை வருமாறு,
குருநாகலில் மாற்றங்களை ஏற்படுத்துவதை எதிர்பார்த்தே குருநாகல் மாவட்ட மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் வாக்களித்தனர். அந்த மாற்றங்களை ஏற்படுத்த நாம் அனைவரும் உறுதியாக உள்ளோம். அந்த மாற்றத்தை ஏற்படுத்தும் பாரியதொரு கட்டமாக இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த நாம் எதிர்பார்க்கிறோம்.
அன்றிலிருந்து இன்று வரை குருநாகல் மாவட்டத்தில் ஒரு பாரிய நீர் வழங்கல் திட்டத்திற்கான தேவையே பாரிய குறைபாடாக இருந்து வருகிறது. குடிநீரை போன்றே குருநாகல் மாவட்டத்திற்கு விவசாயத்திற்கு தண்ணீரும் அத்தியவசியமானதாகும். இன்று நாங்கள் நிறைவுசெய்ய முயற்சிக்கும் திட்டம் குருநாகல் மாவட்டத்தில் ஏராளமான மக்களுக்கு மகத்தான சேவையாக இருக்கும்.
இத்திட்டத்தினூடாக சுமார் 40 ஆயிரம் குடும்பங்கள் நன்மையடைவர். சிறு மற்றும் பெரும் ஆகிய இரு போகங்களிலும் 12,500 ஹெக்டேயருக்கும் அதிகமாக சாகுபடி செய்ய முடியும். இந்த திட்டம் சிறுநீரக நோய்க்கு காரணமாகும் வடமேல் மாகாணத்தின் கடுமையான குடிநீர் பிரச்சினையையும் தீர்க்கும் என்று நம்புகிறோம். வயம்ப எலா திட்டத்தின் ஊடாக பிரதேசத்தில் 07 பிரதான நீர்த்தேக்கங்களுக்கும் 326 சிறிய குளங்களுக்கும் ஏற்படுத்தப்படுவதால் இந்த பகுதியில் நன்னீர் மீன் வளர்ப்பும் உருவாக்கப்படும். சுற்றுச்சூழல் சுற்றுலாத் துறை மேம்படுத்தப்படுவதன் ஊடாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்பதையும் குறிப்பிட வேண்டும். நீர்ப்பாசனத் துறையின் வளர்ச்சியின் மூலம் தேசிய உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் நாங்கள் தயாராக உள்ளோம்.
ஆரம்ப மகாவெலி திட்டத்தில் வடமேல் மாகாணத்திற்கு நீர் வழங்குவதற்கான திட்டங்கள் இடம்பெறவில்லை. இன்று இந்த மாகாண மக்களின் கோரிக்கைகளையும், குருநாகலையும் அபிவிருத்தி செய்வதற்கான அரசியல் தலைமையையும் வழங்க முடிவு செய்துள்ளோம்.
2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தலின் போது, நாடு முழுவதும் கூட்டங்களுக்குச் செல்லும்போது மக்களின் மிகப்பெரிய கோரிக்கை, குறிப்பாக குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்பதாகவே இருந்தது. எங்கள் அரசாங்கத்தின் கீழ் இந்த நாட்டு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகளை வழங்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
நீர்ப்பாசனத்துறை அமைச்சு மூலம் இதற்கான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நாட்டில் குடிநீர் பிரச்சினையை அடுத்த சில ஆண்டுகளில் தீர்க்க முடியும் என்று நம்புகிறோம்.
விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கும் பொருளாதார திட்டங்களையும் நாங்கள் வகுத்துள்ளோம். விவசாயத்திற்கு நீர் வழங்க பாசன திட்டங்களையும் திட்டமிட்டுள்ளோம். நீர்ப்பாசன அமைச்சினால் செயல்படுத்தப்படும் தேசிய நீர்ப்பாசன செழிப்பு திட்டம் அதைத்தான் செய்கிறது.
இந்த நாட்டில் ஆரோக்கியமான மக்கள் தொகையை உருவாக்குவதற்கும், உள்ளூர் உற்பத்திகளுக்கு முன்னுரிமை அளிக்கும் ஒரு தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதற்கும் நாங்கள் இதையெல்லாம் செய்கிறோம்.
இந்த திட்டத்தை போன்றே முழுமையான வசதிகளை கொண்ட பாடசாலைகள், பிற நீர் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பு திட்டங்களையும் நிறைவேற்ற நாங்கள் எதிர்பார்க்கிறோம். இம்மாகாணத்தில் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்துவதற்கு தேவையான சாலை வலையமைப்பை மேம்படுத்த நாங்கள் அதே முறையில் செயல்படுகிறோம் என்று கூற வேண்டும்.
உலகின் மிக மோசமான பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் போராடிய போதிலும், நாட்டின் அபிவிருத்தியை ஒரு கணம் கூட நாங்கள் கைவிடவில்லை.
யுத்தத்தின் போது கூட நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்தோம், கிழக்கை காப்பாற்றி இராணுவத்தை வடக்கே வழிநடத்தும் போது கிழக்கு மாகாணம் வேகமாக அபிவிருத்தி செய்யப்பட்டது. வடக்கில் யுத்தத்தை நிறைவுசெய்த அந்த போர்வீரர்கள் அபிவிருத்தி செய்யப்பட்ட மாகாணங்கள் வழியாக தெற்கிற்கு வந்தனர்.
யுத்தத்தின் போது தான் கொழும்பு – மாத்தறை அதிவேக நெடுஞ்சாலையை அமைக்க நடவடிக்கை எடுத்தோம். யுத்தத்தின் போது தான் நாங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அமைக்க வேலைத்திட்டங்களை முன்னெடுத்தோம். யுத்தத்தின் போதுதான் மத்தள விமான நிலையத்தை உருவாக்க நாங்கள் பணியாற்றினோம். யுத்தத்தின் போதுதான் நாங்கள் நுரைச்சோலை மின் நிலையத்தை உருவாக்கத் தொடங்கினோம்.
நாங்கள் யுத்தத்தை வெற்றி கொண்டதன் பின்னர், இந்த பணிகளை செய்ய விரும்பியிருந்தால் நாங்கள் எதையும் செய்ய முடியாது. எனவே கொவிட் தொற்றுநோய்க்க மத்தியிலும் அபிவிருத்திகளை நிறுத்த மாட்டோம் என்று கூற வேண்டும். நோய்வாய்ப்பட்ட உலகத்தின் மத்தியில் ஆரோக்கியமான அபிவிருத்தியடைந்த நாட்டை உருவாக்குவதே எங்கள் நம்பிக்கை.
முந்தைய நல்லாட்சி அரசாங்கம் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அப்பிரச்சினையை சுட்டிக்காட்டி நாட்டின் அபிவிருத்தியை கைவிட்டது. நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை கட்டமைக்கும் பணி பாதியிலேயே கைவிடப்பட்டது. கொவிட் தொற்றுநோய் ஏற்பட்டபோது எதிர்க்கட்சியில் பலர் பாராளுமன்றத்தை கூட்டக்கூடாது, தேர்தலை நடத்த கூடாது என்று கூறினர். ஆனால் நாங்கள் நாடாளுமன்றத்தையும் கூட்டினோம். தேர்தலையும் நடத்தினோம்.
தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பு மருந்துகளை கொண்டுவருவதற்கு தயாரானபோது அதை எமக்கு கொண்டுவர முடியாது என்றும் கணித்து கூறினர். அது மட்டுமல்லாமல், நாங்கள் மருந்தை இறக்குமதி செய்யத் தயாரானபோது, எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் நாங்கள் மருந்துக்காக பிச்சை எடுக்கப் போவதாகக் கூறினர். நாங்கள் மருந்தைக் கொண்டுவரத் தயாரானபோது, ஐரோப்பிய நாடுகளில் ஒரு சிறந்த மருந்து இருப்பதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட் தொற்றுநோயை இல்லாதொழிக்க தேவையான மருந்தை இப்போது கொண்டு வந்துள்ளோம். இப்போது எதிர்க்கட்சி என்ன சொல்கிறது? இப்போது எதிர்க்கட்சி இந்த மருந்து தோல்வியுற்ற மருந்து. இது மக்களுக்கு கொடுக்க நல்லதல்ல என்று கூறுகிறது. இது ஒரு நோயைக் காட்டி நாட்டை ஒரு குழிக்குள் தள்ளும் முயற்சி.
குருநாகல் மாவட்டத்தில் வடமேல் மாகாண மக்களின் பிள்ளைகளே பெரும்பாலும் போரில் பங்கேற்றனர். யுத்தத்தின் வெற்றியின் பின்னர், முந்தைய நல்லாட்சி அரசாங்கம் இந்த நாட்டின் போர்வீரர்களுக்கு எதிரான மனித உரிமை தீர்மானங்களுக்கு ஒப்புக்கொண்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இன்று ஒரு போர்வீரன் வெளிநாடு செல்வதோ அல்லது வெளிநாட்டில் வேலை செய்வதோ சாத்தியமற்றதாக மாற்ற அவர்கள் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலைமைக்கு முகங்கொடுக்க நாம் தயார். நாம் இந்த தொற்று நிலைமைக்க மத்தியில் வேகமாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
இப்பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கு வேகமாக தீர்வு கண்டு வருகின்றோம். அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு தீர்வுகளை வழங்கி வருகிறார். இவை அனைத்தும் இந்த தொற்று நிலைமைக்கு மத்தியிலேயே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இத்தொற்று மத்தியில் அபிவிருத்தியடைந்த நாடொன்றை நாம் உருவாக்குவோம். அதனை நாம் திட்டமிட்டு நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, இராஜாங்க அமைச்சர்களான அனுராத ஜயரத்ன, சிறிபால கம்லத், தயாசிறி ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான குணபால ரத்ணசேகர, அசங்க நவரத்ன, சாந்த பண்டார, சரித்த ஹேரத், யூ.கே.சுமித் உடுகும்புர, ஜயரத்ன ஹேரத், மஞ்சுளா திசாநாயக்க, வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே உள்ளிட்ட அரச உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.