இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தொற்றியதன் பின்னர், நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே, நியூமோனியா ந...

இலங்கையில் தற்போது வேகமாக பரவிவரும் புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தொற்றியதன் பின்னர், நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே, நியூமோனியா நிலைமை ஏற்படும் என சுகாதார விசேட வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.
காற்றின் மூலம் பரவும் என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் தாக்கத்திலிருந்து, தம்மை பாதுகாத்துக் கொள்வதற்கு கட்டாயம் முகக் கவசங்களை அணியுமாறும் சுகாதார தரப்பினர் கேட்டுக்கொள்கின்றனர்.
இதன்படி, புதிய வீரியம் கொண்ட கொவிட் வைரஸ், முதலாவது மற்றும் இரண்டாவது அலைகளை போன்றே, மிகவும் வேகமாக பரவி வருகின்றது என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்ட வைரஸ்களை விடவும், இந்த முறை அடையாளம் காணப்பட்டுள்ள வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவக்கூடியது என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
புதிய கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவரிடமிருந்து, அந்த வைரஸ் சுற்று சூழலில் பரவும் பட்சத்தில், அது சுமார் ஒன்றரை மணித்தியாலம் வரை அதே இடத்தில் காணப்படும் என அவர்கள் கூறுகின்றனர்.
ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மானுடவியல் மற்றும் மூலக்கூறு அறிவியல் துறை பேராசிரியர் நீலிகா மலவிகே இதனைத் தெரிவிக்கின்றார்.
இந்த புதிய வகை வைரஸானது, காற்றிலும் பரவும் என உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் ஏனைய ஆய்வு நிறுவனங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.
இவ்வாறு பரவும் வைரஸானது, சுமார் ஒன்றரை மணித்தியாலங்கள் வரை காற்றில் இருக்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் அவர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.
இதனால், முகக் கவசம் அணிவது கட்டாயமானது என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
இதற்கு முன்னர் பரவிய வைரஸ், ஒருவருக்கு தொற்றுக்குள்ளாகும் பட்சத்தில், அவருக்கு காய்ச்சல், இருமல், தொண்டை வலி உள்ளிட்ட நோய் அறிகுறிகள் தென்பட்டதாகவும், அதன் பின்னரே நுரையீரல் பாதிப்பு ஏற்படும் எனவும் அவர் கூறுகின்றார்.
எனினும், தற்போது பரவும் புதிய வகை கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளான ஒருவருக்கு நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு முன்னரே, அவருக்கு நியூமோனியா ஏற்படும் என அவர் குறிப்பிடுகின்றார்.
இதேவேளை, இளைய சமூகத்திற்கு இந்த வைரஸ் தாக்கும் விதம் அதிகளவில் காணப்படுவதாகவும் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.