ஆப்கானிஸ்தான் − காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 60திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள...
ஆப்கானிஸ்தான் − காபூல் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (26) நடத்தப்பட்ட இருவேறு குண்டுத் தாக்குதல்களில் 60திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 13 அமெரிக்க படையினரும் அடங்குவதாக சர்வதேச ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் மேலும் 140திற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி மாதத்திற்கு பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தினர் கொல்லப்படுவது இதுவே முதல்முறை என கூறப்படுகின்றது.
பயங்கரவாதிகளால் தாக்குதல் நடத்தப்படலாம் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தன.
தாலிபன்களுடன் செய்து கொண்ட உடன்பாட்டின் பிரகாரம், எதிர்வரும் 31ஆம் திகதிக்குள் வெளிநாட்டு படைகள் அனைத்தும் ஆப்கானிஸ்தானிலிருந்து முமுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், நாட்டை விட்டு வெளியேறுவதற்கான காலக்கெடு நெருங்குவதால் ஆயிரக்கணக்கானோர் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் கூடியிருந்த நிலையிலேயே நேற்று குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
அந்த நாட்டு நேரப்படி நேற்று மாலை 6 மணியளவில் விமான நிலையத்தின் நுழைவாயில் அருகே முதலாவது குண்டு வெடித்தது.
அதனைத் தொடர்ந்து சில நிமிடங்களின் பின்னர், ஆப்கானியரை மீட்பதற்காக பிரித்தானிய படைகள் பயன்படுத்திவந்த ஹோட்டலில் மற்றொரு குண்டு வெடித்தது.
இரண்டு குண்டுகளுமே விமான நிலையத்திற்கு வெளியே வெடித்துள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவித்தன.
தாக்குதலுக்கான பொறுப்பை ISIS-K பயங்கரவாத அமைப்பு ஏற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் தமது மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
காபூல் விமான நிலையத்தில் தற்போது 5,800 அமெரிக்க படை வீரர்களும், சுமார் 1000 பிரித்தானாய வீரர்களும் உள்ளதாக அறிய முடிகின்றது.
இதுவரை ஆப்கானிஸ்தானில் இருந்து 104,000 பொதுமக்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 66,000 பேர் அமெரிக்காவினாலும், மேலும் 37,000 பேர் அமெரிக்காவின் நட்பு நாடுகளினாலும் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உள்ளிட்ட பல நாடுகள் ஏற்கனவே தங்களது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டன.