இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றிருப்பது டெல்டா பிறழ்வில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த ஏற்பாடாகும் என பிரித்தானியாவில் மேற்...
இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றிருப்பது டெல்டா பிறழ்வில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கான சிறந்த ஏற்பாடாகும் என பிரித்தானியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வொன்றின் மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Oxford-AstraZeneca தடுப்பூசி மிகக் குறைந்தபட்ச செயல்திறனைக் கொண்டிருந்த போதிலும், அதனை ஏற்றிக்கொண்ட பின்னர் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் Pfizer-BioNTech தடுப்பூசிக்கு நிகரான உயர்ந்த பாதுகாப்பை தருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக BBC செய்தி வௌியிட்டுள்ளது.
கொவிட்19 இருந்தவர்கள் இந்த தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும்போது முன்பு இருந்ததைவிட பிறபொருள் எதிர்ப்புத் தன்மையை (Antibodies) இந்த இரண்டு தடுப்பூசிகளும் ஏற்படுத்துவதாக சுட்டிக்காட்டப்படுகின்றது.
முதலாவது மற்றும் இரண்டாவது தடுப்பூசிகளுக்கு இடையிலான காலம் அவற்றின் செயல்திறனில் பாதிப்பை ஏற்படுத்த மாட்டாது.
அத்துடன் Oxford-AstraZeneca மற்றும் Pfizer-BioNTech கொவிட்19 தடுப்பூசிகளை ஏற்றிக் கொள்ளும் இளையவர்கள், வயதுவந்தவர்களை விட அதிக பாதுகாப்பைப் பெறுவதாகவும் பிரித்தானிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இதேவேளை, Moderna தடுப்பூசி தொடர்பில் போதுமான தரவுகள் இல்லையென்பதுடன், அது ஏனைய தடுப்பூசிகளைப் போன்றே சாதாரண தரம் வாய்ந்தது என ஆய்வாளர்கள் நம்பிக்கை வௌியிட்டுள்ளனர்.
2.5 மில்லியன் பரிசோதனை முடிவுகள் தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், பிரித்தானியாவின் Oxford பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் ஆகியன இந்த ஆய்வை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.



