12 வயது முதல் 18 வயது வரையான சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்...
12 வயது முதல் 18 வயது வரையான சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசியை செலுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவிக்கின்றார்.
நாட்டில் கொவிட் பரவ ஆரம்பித்த காலம் முதல் இடைக்கிடை பாடசாலைகள் மூடப்பட்டதுடன், பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை வழமைக்கு திரும்பவில்லை.
இந்த நிலையில், பாடசாலை மாணவர்களுக்கு விரைவில் தடுப்பூசிகளை செலுத்தி, பாடசாலைகளை விரைவில் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்துவது குறித்து உலக சுகாதார ஸ்தாபனம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்கள் பல்வேறு பரிந்துரைகளை முன்வைத்துள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, தரம் 7 முதல் தரம் 13 வரையான மாணவர்களுக்கு முதற்கட்டமாக தடுப்பூசிகளை செலுத்த திட்டமிடப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.
பாடசாலை ஆசிரியர்கள் உள்ளிட்ட கல்வி சார் ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுமாயின் கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
இந்த திட்டத்தின் கீழ், சுமார் 20 லட்சம் மாணவர்களுக்கு தடுப்பூசியை செலுத்த முடியும் என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல நம்பிக்கை வெளியிடுகின்றார்.