நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த நடாத்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸாரால்...
நல்லூர் தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த நடாத்த நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு பொலிஸாரால் தடை ஏற்படுத்தப்பட்டது.
நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியைச் சுற்றி பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபியில் அஞ்சலி நிகழ்வு நடத்தும் எந்தவொரு நபரையும் கைது செய்யும் வகையில் பொலிஸார் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள கோவிட்-19 தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு அமைய நீதிமன்ற தடை உத்தரவின்றி இந்த நடவடிக்கையை முன்னெடுக்குமாறு பொலிஸாருக்கு உயர் மட்டத்திலிருந்து பணிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைய யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட மூவர் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இன்று பிற்பகல் 2.20 மணியளவில் நினைவுத் தூபிக்குச் சென்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனால் பொலிஸாருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
“நீதிமன்றத் தடை உத்தரவின்றி என்னை எதுவுமே செய்ய முடியாது. நான் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தியே தீருவேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் திட்டவட்டமாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை அரசுகளிடம் நீதி கோரி – 5 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உணவு ஒறுப்பிலிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 34ஆவது நினைவேந்தல் நிகழ்வு கடந்த 15ஆம் திகதி முதல் உணர்வு பூர்வமாக இடம்பெற்று வருகிறது.