மதுபோதையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஊரவர்கள் மடக்கி பிடித்து , யாழ்ப்பாண பொலிசாரிடம்...
மதுபோதையில் விபத்தினை ஏற்படுத்தி விட்டு தப்பி செல்ல முற்பட்ட இரண்டு பொலிஸ் உத்தியோகஸ்தர்களை ஊரவர்கள் மடக்கி பிடித்து , யாழ்ப்பாண பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களில் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் மற்றையவர் முல்லைத்தீவு ஐயன்குளம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் முழவை சந்திக்கு அருகில் இன்றைய தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
மது போதையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் நிலைதடுமாறி எதிரே வந்த வான் ஒன்றுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். அதில் வான் சிறிய சேதத்திற்கு உள்ளாகியுள்ளது.
விபத்துக்கு உள்ளான இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் வான் சாரதியுடன் தம்மை பொலிஸார் என கூறி முரண்பட்டதுடன் , அங்கிருந்து தப்பி செல்ல முற்பட்டனர்.
அதனை அவதானித்தவர்கள் இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் மடக்கி பிடித்து , யாழ்ப்பாண பொலிஸாரிடம் கையளித்ததை அடுத்து இருவரையும் பொலிஸார் கைது செய்து பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை மதுபோதையில் இருந்த இரு பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் கார் ஒன்றில் வன்முறை கும்பல் ஒன்றினை சம்பவ இடத்திற்கு வரவழைத்திருந்த போதிலும் , அங்கு கூடி நின்ற ஊரவர்கள் குறித்த வன்முறை கும்பலை மிரட்டி அங்கிருந்து அப்புறப்படுத்தினர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.