நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் பணிப் புரியும் ஆசிரியைகள், புடவைகளுக்கு பதிலாக மாற்று ஆடைகளை இன்றைய தினம் (நவ.21) அணிந்து கடமைகள...
நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் பணிப் புரியும் ஆசிரியைகள், புடவைகளுக்கு பதிலாக மாற்று ஆடைகளை இன்றைய தினம் (நவ.21) அணிந்து கடமைகளுக்கு சமூகமளித்திருந்தனர்.
நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், புடவைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையினால், தாம் இவ்வாறு மாற்று ஆடைகளை அணிய ஆரம்பித்துள்ளதாக, குறித்த ஆசிரியைகள் சமூக வலைத்தளத்தில் பதிவுகளை இட்டுள்ளனர்.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற பொருளாதார பிரச்சினைகளினால், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகின்ற காரணத்தினால்;, புடவையுடன் தொழிலுக்கு சமூகமளித்தல் சிரமமாக உள்ளதென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அரச சேவையில் பணியாற்றுவோர் தமக்கு இலகுவான ஆடைகளை அணித்து, கடமைகளுக்கு சமூகமளிக்க முடியும் என பொது நிர்வாக அமைச்சு சுற்று நிரூபமொன்றின் ஊடாக அறிவித்துள்ள நிலையில், அந்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டே தாம் இலகுவான ஆடைகளை அணிந்து தொழிலுக்கு சமூகமளித்ததாக அவர்கள் கூறுகின்றனர்.
இவ்வாறு மாற்று ஆடைகளை வருகைத் தந்த தம்மை, மாணவர்கள் அன்புடன் அரவணைத்துக்கொண்டதாகவும் அவர்கள் தமது சமூக வலைத்தள பதிவில் குறிப்பிட்டுள்ளனர்.
பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்று நிரூபத்திற்கு அமைய, அரச சேவையில் பணியாற்றும் ஆசிரியர்களும் தாம் விரும்பும் ஆடைகளை அணிந்து பாடசாலைகளுக்கு சமூகமளிக்க இடமளிக்க வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் பெரும்பாலான பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியைகள், புடவையுடன் வருகைத் தந்திருந்தார்கள்.
தமக்கு புடவையுடன் கடமைக்கு வருகைத் தருகின்றமை இலகுவானது என அவர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், ஆசிரியைகள் என்றால், புடவை அணிவது சரியானது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.