சுற்றுலா விசா மூலம் மலேசியாவில் வேலை வழங்குவதாக கூறி 5 இலட்சத்து 15,000 ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நாளை (13) வரை விளக்...
சுற்றுலா விசா மூலம் மலேசியாவில் வேலை வழங்குவதாக கூறி 5 இலட்சத்து 15,000 ரூபாவை பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்ட பெண்ணை நாளை (13) வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்வேறு நபர்களிடம் இவ்வாறு பணத்தை பெற்றுக்கொண்டு தலைமறைவாகி இருந்த நிலையில், அவரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் மலேசியா செல்வதற்காக கடந்த 4ஆம் திகதி விமான நிலையத்திற்கு வந்த போது, குறித்த நபர்களின் ஆவணங்களில் சந்தேகம் அடைந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விமான நிலைய பிரிவு அதிகாரிகள், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது மலேசியாவிற்கு வேலைக்கு செல்லும் விடயம் உறுதியானது.
பின்னர், சந்தேகநபர்களை தடுத்து நிறுத்திய அதிகாரிகள், அவர்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ள நிலையில், தங்காலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரிடம் வெளிநாடு செல்ல விசா பெற்றுக் கொடுப்பதற்காக பணம் கொடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன்படி, குறித்த பெண்ணை கைது செய்வதற்காக விசாரணை அதிகாரிகள் தங்காலை பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றுள்ளனர், ஆனால் அவர் ஏற்கனவே வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
பின்னர், வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவுக்கு வருமாறு பெண்ணின் மகனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு, குறித்த பெண் தனது கணவருடன் வந்து பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரிடம் முன்னிலையானதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு தலங்கம பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
இதன்போது, முறைப்பாடு வழங்கியவர்களிடம் இருந்து பெறப்பட்ட முழு பணத்தையும் தருவதாக சம்பந்தப்பட்ட பெண் நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளார்.