"புத்தி கெட்ட மனிதர் எல்லாம் " திரைப்படம் தமக்கு பெருமளவு இலாபத்தை ஈட்டி தந்துள்ளதாக அந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் தெ...
"புத்தி கெட்ட மனிதர் எல்லாம் " திரைப்படம் தமக்கு பெருமளவு இலாபத்தை ஈட்டி தந்துள்ளதாக அந்த திரைப்படத்தின் இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில், யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவின் ஒரு அங்கமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
ஈழ சினிமா ஊடாக வருமானத்தை ஈட்ட முடியாது என பலரும் கருத்துக்களை முன் வைத்து வரும் நிலையில் , கடந்த வருடம் எம்மால் வெளியிடப்பட்ட "புத்தி கெட்ட மனிதர்கள் எல்லாம்" திரைப்படம் பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது.
மிக குறைந்த செலவில் திரைப்படத்தை எடுத்து , திரைக்கு கொண்டு வந்து , இன்றைய நிலையில் அது எமக்கு பெரும் இலாபத்தை ஈட்டி தந்துள்ளது.
எமக்கான சந்தை திறந்தே உள்ளது. நாம் யாருக்காக படம் எடுக்கிறோம். அதனை எப்படி கொடுக்கிறோம் என்பதில் எமது வெற்றி உள்ளது.
புத்திகெட்ட மனிதர் எல்லாம் திரைப்படம் தொடர்பில் எதிர் மறையான விமர்சனங்கள் பல என்னிடம் தனிப்பட்ட முறையில் பலர் முன் வைத்து இருந்தனர். அதில் பலதை ஏற்றுக்கொண்டுள்ளேன். எனக்கும் எமது படத்தில் பல குறைகள் இருப்பது தெரியும். கிடைக்கப்பெறுகிற வளத்தில் என்ன செய்ய முடியமா அதனை விட அதிகமாகவே கொடுத்துள்ளோம் என நம்புகிறேன்.
எமது கதைகளை எந்த சமரசமும் இன்றி திரையில் வெளி கொணர வேண்டும். அதற்காக எனது உழைப்பு நிச்சயம் இருக்கும்.
அதற்கு முதல் என்னை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதனூடாக எனக்கான அடையாளத்தை ஏற்படுத்திக்கொண்டு , எம் கதைகளை எந்த சமரசமும் இன்றி, " இது தான் எங்கள் கதைகள்" என திரைக்கு நிச்சயம் கொண்டு வருவேன் என்றார்.