யாழ்ப்பாணம் - தமிழகம் இடையே கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கு இருநாட்டு அரசாங்கங்களும் ஆவலாக உள்ளன என கப்பல் மற்றும் சிவில் விமான சேவைகள் போக்குவரத...
யாழ்ப்பாணம் - தமிழகம் இடையே கப்பல் சேவை ஆரம்பிப்பதற்கு இருநாட்டு அரசாங்கங்களும் ஆவலாக உள்ளன என கப்பல் மற்றும் சிவில் விமான சேவைகள் போக்குவரத்து அமைச்சின் செயலாளர் ருவான் சந்திர தெரிவித்தார்.
நேற்று சனிக்கிழமை வடமாகாண ஆளுநர் தலைமை அலுவலகத்தில் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு துறைசார்ந்த அமைச்சு என்ற அடிப்படையில் நாங்கள் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
பயணிகள் சேவைக்கும் பொருட்கள் பரிமாற்ற சேவைக்கும் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம். துறைமுகத்தை விரைவாக அபிவிருத்தி செய்வதற்கு இலங்கை சுங்க திணைக்களம், குடிவரவு குடியகல்வு, தனிமைப்படுத்துதல்,
உள்ளிட்ட அனைத்து முகவர்களும் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கு பற்றினார்கள். இது சம்பந்தமாக ஆழமாக கலந்து ஆலோசித்து வருகின்ற நிலையில் இலங்கை கடற்படையும் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.
மேலும் குறிப்பிட்ட எல்லை வரைக்கும் காவல் வழங்குவதற்கும் ஒத்துக்கொண்டிருந்தார்கள். அடிப்படை வசதிகள்போதிய அளவுக்கு இல்லை என்ற போதிலும் நாங்கள் பயணிகள்
மற்றும் பொருட்கள் சேவைகளுக்கு தேவையான கட்டிடங்கள் போன்றவற்றை பெற்றுக் கொள்வதற்கான செயல் முறையில் ஈடுபட்டுள்ளோம். இங்கே இருக்கின்ற வசதிகள் போதிய அளவில் இல்லாமல் விட்டாலும்
படகு சேவைகள் வழங்குபவர்களை கப்பல் சேவைகள் வழங்குபவர்களை நாம் தங்கள் சேவையை தொடர்ந்து வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம். மேலும் பல சேவை வழங்குனர்கள் இங்கு வந்து தங்கள் சேவைகளை வழங்குவதனூடாக
முதலீட்டாளர்களின் முதலீட்டை கவர முடிவது மட்டுமன்றி சுற்றுலாப் பிரியாணிகளை கவரவும் முடியும். ஆகவே கப்பல் சேவையை விரைவாக ஆரம்பிப்பதனூடாக இரு நாட்டுக்கும் இடையிலான உறவையும் மேம்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.