வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த கும்பலைச் சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் மாவட்...
வீடொன்றுக்குள் வாள்களுடன் புகுந்து வீட்டிலுள்ளவர்களை அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பித்த கும்பலைச் சேர்ந்த நால்வர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து கொள்ளையிட்ட நகைகள், வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் கோப்பாய், மூன்று கோயிலுக்கு அண்மையாக கடந்த ஜனவரி 3ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.
5 பேர் கொண்ட கும்பல் வாள்களுடன் வீட்டுக்குள் புகுந்து அங்குள்வர்களை இருத்திவைத்து மூன்று பெண்களை அடித்துத் துன்புறுத்தியும் வயோதிபர்களை அச்சுறுத்திவிட்டு 12 தங்கப் பவுண்
நகைகளை கொள்ளையிட்டுத் தப்பித்தது.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. அதுதொடர்பில் யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளில் சுன்னாகம், இணுவில் பகுதிகளைச் சேர்ந்த 25, 26 வயதுகளையுடைய நால்வர் நேற்று கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்களிடம் கொள்ளையிட்ட நகைகளில் ஒரு பகுதி, அடகு வைக்கப்பட்ட நிலையில் பற்றுச்சீட்டுகள் மற்றும் வாள்கள் என்பன கைப்பற்றப்பட்டன.
இதேவேளை, கடந்த ஜனவரி 15ஆம் திகதி தைப்பொங்கள் தினத்தன்று வீதியில் சென்ற ஆசிரியை தாக்கிவிட்டு நகையை கொள்ளையிட்ட சம்பவத்துடனும் இந்த சந்தேக நபர்களுக்கு தொடர்புள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.