கற்பிட்டி ஆனவாசல் பகுதியில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு பீடி இலைகளை கடத்த முற்பட்ட மூவர் கற்பிட்டி விஜய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு...
கற்பிட்டி ஆனவாசல் பகுதியில் நேற்று (21) செவ்வாய்க்கிழமை இரவு பீடி இலைகளை கடத்த முற்பட்ட மூவர் கற்பிட்டி விஜய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சட்ட விரோதமாக பீடி இலைகளை லொறியில் கொண்டு செல்லப்படுவதாக கற்பிட்டி விஜய கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய, ஆனவாசல் பகுதியில் குறித்த லொறியை மறித்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன்போது அந்த லொறியில் 48 உரைகளில் 1508 கிலோ பீடி இலைகளும், 39 உரைகளில் 744 கிலோ புகையிலைகளும், 8 உரைகளில் 129 கிலோ புகையிலைத்தூளும் மறைத்து வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த சோதனை நடவடிக்கையின் பின்னர் கலேவெல பகுதியைச் சேர்ந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்த பீடி இலைகள், புகையிலைகள், புகையிலைத்தூள் சட்டவிரோதமாக இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்டுள்ளன என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்கள், கைப்பற்றப்பட்ட பீடி இலைகள், புகையிலைகள், புகையிலைத்தூள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லொறி ஆகியவற்றை கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில் சந்தேக நபர்களிடம் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ள கற்பிட்டி பொலிஸார், சந்தேக நபர்களையும் தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பீடி இலைகள், லொறி உள்ளிட்டவற்றை கட்டுநாயக்க சுங்கத் திணைக்களத்தினரிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.
அண்மைக்காலமாக இந்தியாவிலிருந்து கற்பிட்டி பகுதிக்கு ஐஸ் போதைப்பொருள், கேரள கஞ்சா, உலர்ந்த மஞ்சள், கிருமிநாசினிகள், திரவ உரம், ஏலக்காய் மூடைகள், கடலட்டைகள், சுறா இறகுகள், பாதனிகள், இலத்திரனியல் உபகரணங்கள், கடற்குதிரைகள் முதலானவை கடத்தப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


