அதிமுக-வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.அ.தி.மு....
அதிமுக-வின் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஜூலை மாதம் நடந்த பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்திருக்கிறது.அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை சர்ச்சையால் ஒ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி தரப்பினர் இடையே பெரும் கருத்து மோதல் ஏற்பட்டு இருவரும் இரு அணிகளாக பிரிந்து செயல்படுகின்றனர்.
இருவருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வந்தநிலையில் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு, பொதுக்குழுவை கூட்டியது. அப்போது எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் கட்சியை விட்டு நீக்கப்பட்டனர்.இந்த பொதுக்குழுவையும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லும் எனத் தீர்ப்பு வழங்கினார்.இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தது.
இந்த வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு தொடர்ந்து விசாரித்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பை திகதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளி வைத்திருந்தனர்.இதற்கிடையே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் தங்கள் தரப்புக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையம் அவைத்தலைவர் முடிவு படி முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.இதன் பின்னர் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதலின் அடிப்படையில், இரட்டை இலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி அணிக்கு தற்காலிகமாக ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
ஈரோடு அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், அ.தி.மு.க பொதுக்குழு விவகாரத்தில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான தீர்ப்பில் உச்ச நீதிமன்ற நீதிபதி தினேஷ் மகேஸ்வரி, சஞ்சய் குமார் அமர்வு, “சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் உறுதி செய்கிறோம். மேலும், இது தொடர்பான அனைத்து வழக்குகளும் முடித்து வைக்கப்படுகிறது” எனத் தீர்ப்பளித்திருக்கின்றனர்.


