கச்சதீவில் எந்தவொரு புத்தர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார். கச்சதீவ...
கச்சதீவில் எந்தவொரு புத்தர் சிலையும் பிரதிஷ்டை செய்யப்படவில்லை என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கயான் விக்ரமசூரிய தெரிவித்துள்ளார்.
கச்சதீவில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டமை தொடர்பில் பிபிசி ஊடகத்துக்கு அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.
‘கச்சதீவில் நானும் இருந்தேன். அந்த இடத்தில் ஊடகவியலாளர்களும் இருந்தார்கள். அவ்வாறு சிலை வைக்கப்பட்டிருந்தாலும், அங்கு சென்றவர்கள் அதைப் பார்வையிட்டிருப்பார்கள் அல்லவா?
திருவிழாவின்போது, கச்சதீவு முழுவதும் அந்த சந்தர்ப்பத்தில் சுமார் 6000 பேர் வரை இருந்தார்கள். அருட்தந்தையர்களும் சென்றார்கள். புத்தர் சிலை வைக்கப்பட்டிருந்தால், அதை அவர்கள் அவதானித்திருக்க வேண்டும் அல்லவா?
புத்தர் சிலையை மறைத்து வைக்க முடியாது. அவ்வாறு புத்தர் சிலை அங்கிருந்தால் நிச்சயமாக அவதானித்திருக்க வேண்டும். படமொன்றையாவது அப்போது எடுத்திருக்க முடியும் அல்லவா?
அவ்வாறு ஒன்று இல்லை. நானும் தீவு முழுவதும் சென்றேன். நான் அவ்வாறானதொன்றை அவதானிக்கவில்லை,” என இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கேப்டன் கயான் விக்ரமசூரிய குறிப்பிட்டார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.