2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை ச...
2015ஆம் ஆண்டு புங்குடுதீவில் கடத்தப்பட்டு கூட்டுப்பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பிரதிவாதிகள், தண்டனையில் இருந்து தம்மை விடுவிக்கக் கோரி தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்களின் விசாரணை, எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த மேன்முறையீட்டு மனுக்கள் இன்று நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
முன்வைக்கப்பட்ட உண்மைகளை பரிசீலித்த நீதியரசர்களின் ஆயம், மேன்முறையீட்டு மனுக்களை ஒக்டோபர் 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உத்தரவிட்டது.
சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதான குற்றவாளியான சுவிஸ் குமார் உட்பட 7 பிரதிவாதிகள் மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
முன்னதாக, 18 வயதான பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் கடத்தல், கூட்டுப் பலாத்காரம் மற்றும் படுகொலை தொடர்பான வழக்கை விசாரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், வழக்கின் பிரதான சந்தேகநபர் சுவிஸ்குமார் உள்ளிட்ட 07 பேருக்கு மரண தண்டனை விதித்து 2017 செப்டெம்பர் 27ஆம் திகதி தீர்ப்பளித்தது.
அத்துடன் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 1 மில்லியன் ரூபாவை இழப்பீடாக வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மரண தண்டனைக்கு மேலதிகமாக, சந்தேகநபர்களுக்கு மேலும் 30 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.
புங்குடுதீவைச் சேர்ந்த 18 வயதான பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலை முடிந்து வீடு திரும்பும் போது யாழப்பாணம் புங்குடுத்தீவு பகுதியில் கடத்தப்பட்டு, கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.