எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஸ்ட ஈட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பி...
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கான நஸ்ட ஈட்டின் நான்காவது கட்டத்தினை தமிழ் – சிங்கள புதுவருடப் பிறப்பிற்கு முன்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடற்றொழில் அமைச்சரின் தொடர்ச்சியான முயற்சியினால் குறித்த கப்பல் விபத்தினால் பாதிக்கப்பட்ட கடற்றொழில் சார்ந்த மக்களுக்கான நான்காவது கட்ட நஸ்ட ஈட்டு தொகையாக சுமார் 15 ஆயிரத்து 149 இலட்சம் ரூபாய் கடற்றொழில் அமைச்சிற்கு கிடைத்துள்ள நிலையில், அவற்றை உடனடியாக பயனாளிகளுக்கு வழங்கி வைப்பதற்கான ஆலோசனைகளும் கடற்றொழில் அமைச்சரினால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் நான்காம் கட்ட நஸ்ட ஈட்டினை பெற்றுக் கொள்வோர் தொடர்பான விபரங்கள் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்களை சேர்ந்த கடற்றொழில் மற்றும் நீரியல்வளத் திணைக்களத்தின் அதிகாரிகள் ஊடாக சம்மந்தப்பட்ட பிரதேச செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், காசோலைகளை சம்மந்தப்பட்ட மாவட்ட செயலகங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளையும் கடற்றொழில் அமைச்சு மேற்கொண்டுள்ளது.
ஏற்கனவே மூன்று கட்டங்களாக கிடைத்திருந்த நஸ்ட ஈட்டு தொகை பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு மாத்திரம் பகிர்ந்தளிக்கப்பட்ட நிலையில், தற்போது கிடைத்துள்ள நான்காவது கட்ட நஸ்ட ஈட்டினை கடலுணவு வியாபாரிகள், கருவாடு உற்பத்தியாளர்கள் போன்ற கடற்றொழில் சார்ந்த தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளிக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.