நாவற்குழி மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வைத்தியசாலை கழிவு எரியூட்டி அமைக்கப்படும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தரப்பு விளக்கமளித்துள்ளது. ...
நாவற்குழி மக்கள் ஏற்றுக்கொண்டால் மட்டுமே வைத்தியசாலை கழிவு எரியூட்டி அமைக்கப்படும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தரப்பு விளக்கமளித்துள்ளது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை எரியூட்டுவதற்கான பொறிமுறையை தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி மேற்கு J/294 கிராம அலுவலர் பிரிவில் முன்னெடுக்க முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அதுதொடர்பில் அங்கஜன் இராமநாதன் கேட்டுக் கொண்டதற்கிணங்க பிரதேச மக்கள் பிரதிநிதிகளுக்கும் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கும் இடையிலான கூட்டம் இன்று (20) காலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது.
இதன்போது, எரியூட்டி அமைக்கப்படவுள்ள காணி குடியிருப்புக்களை அண்மித்த காணியாக இருப்பதோடு, காணியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகள் வயல் நிலங்களாகவும், தெற்கு பகுதி மீனவர்கள் பயன்படுத்தும் பரவைக்கடலாகவும் காணப்படுகிறது.
இந்த சூழலில் ஆலயங்கள்,குளங்கள் மற்றும் குடிநீர் கிணறுகள் காணப்படுகின்றன.எனவே எரிகூடம் அமைத்து பயன்படுத்தும் போது நிலத்தடி நீர் மாசுபடும்
அதேவேளையில் போதிய கண்காணிப்பு இல்லாத பட்சத்தில் வைத்தியசாலை கழிவுகள் குடியிருப்புக்களுக்கு வரக்கூடிய சந்தர்ப்பங்களும் உள்ளன.
மேலும் கழிவுகளை குடியிருப்புக்கள், ஆலயங்களை தாண்டியே மேற்படி காணிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.இதனால் பொதுமக்கள் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.
அத்துடன் சோளக்காற்று மற்றும் திசைக் காற்று ஆகியன வீசும் போது எரிகூடத்தில் இருந்து வெளிவரும் மாசுக்காற்று காரணமாக சுற்றுச்சூழல் பாதிப்படைவதோடு- நோய் நொடிகள் ஏற்படக்கூடும் உள்ளிட்ட விடயங்கள் பிரதேச மக்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டன.
தொடர்ந்து வைத்தியசாலை தரப்பிலிருந்து, குறித்த எரியூட்டி அமைக்கப்படும் பொறிமுறை மற்றும் அதன் செயற்பாடுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் பிரதேச மக்கள் அனைவருக்கும் விளக்கமளிக்க வேண்டிய கடப்பாடு வைத்தியசாலை தரப்புக்கு உள்ளது என்பதை அங்கஜன் இராமநாதன் வலியுறுத்தியதை தொடர்ந்து, குறித்த எரியூட்டி அமைப்பதற்குரிய பங்குதாரர்களுடனான சந்திப்பொன்றை நடாத்தி – அதனைத்தொடர்ந்து மக்களுக்கு விளக்கமளிக்கும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படும் என யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.
மேலும், பிரதேச மக்களின் அனுமதியின்றி இத்திட்டத்தை மேற்கொள்வதில்லை என்றும், வைத்தியசாலை கழிவுகளை எரிப்பதற்கு பொருத்தமான பிறிதொரு இடத்தை தெரிவுசெய்து பரிசீலிக்கவுள்ளதாகவும் அவர் இச்சந்திப்பின்போது தெரிவித்தார்.