புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர, ...
புராதன பௌத்த தொல்பொருள் சின்னங்களை சிதைத்து, சட்டத்திற்கு முரணாக சிவன் கோயிலை அமைக்கும் தரப்பினருக்கு எதிராக சிவனின் சாபம் திரும்புமே தவிர, ஏனைய தரப்பினருக்கு அல்ல என தாம் கருதுவதாக சரத் வீரசேகர குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றியபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
வவுனியா – வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயப் பகுதியை ‘வடுநங்கல’ பகுதி எனக் குறிப்பிட்ட அவர், வடுநங்கல பகுதியில், விகாரையில், பௌத்த சின்னங்கள் காணப்பட்டுள்ளமை 1970 ஆம் ஆண்டுகளில் தொல்பொருள் சான்றுகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
1940 ஆம் ஆண்டு 9 ஆம் இலக்க தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, 1815 ஐ விடவும் பழமையான அனைத்தும், கட்டாயமாக, சட்டம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தொல்பொருளுக்கு சொந்தமானதாகும்.
அதில் தலையீடு செய்யவோ, சேதமாக்கவோ எவருக்கும் உரிமை இல்லை. அந்த விகாரைக்கு அருகாமையில், 11 குளங்கள் இருந்துள்ளன.
2018 ஆம் ஆண்டில், அவை சேதமாக்கப்பட்டு, வனம் அழிக்கப்பட்டு, 2020 ஆம் ஆண்டுதான், அங்கு சிவன் ஆலயம் உருவாக்கப்பட்டது.
இதேபோன்றுதான், குறுந்தூர் விகாரையிலும் இடம்பெற்றது. இதுதான் இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையா?
தமிழ் இனவாத அரசியல்வாதிகளே, இனவாத பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றனர்.
இனப்பிரச்சினை உள்ளதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், நாட்டில் அவ்வாறு இனப்பிரச்சினை இல்லை.
பௌத்த மரபுரிமைகளை அழிப்பதற்கு ஒரு எல்லை உண்டு, அந்த எல்லையை மீறி செயற்பட வேண்டாம் என தாம் கூறுவதாக சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிராக தாங்கள் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.