அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு உண்மையிலேயே பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த வடக்கு மாகா...
அண்மையில் நியமிக்கப்பட்ட மூன்று ஆளுநர்கள் நியமனம் தொடர்பில் ஜனாதிபதிக்கு உண்மையிலேயே பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்த வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் பதவி நீக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுக்குமே மாகாணம் தொடர்பான அடிப்படை அறிவே கிடையாது என்றார்.
அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போது வடமாகாண சபை அவைத்தலைவர் இதனை தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், அண்மையில் நீக்கப்பட்ட மூன்று ஆளுநர்களுமே எதேச்சாதிகாரமாக செயற்பட்டதுடன் மாகாணம் தொடர்பான அடிப்படை அறிவே கிடையாது.
ஆனால் ஆளுநராக நியமிக்கப்பட்ட மூவருமே மாகாண நிர்வாகத்துடன் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டு செயல்பட்டவர்கள்.
கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மத்திய மாகாண சபையிலே உறுப்பினராகவும் அமைச்சராகவும் இருந்து செயல்பட்டவர். வடமேல் மாகாண ஆளுநர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்த்தன தென்மாகாண சபை உறுப்பினராக இருந்து செய்யப்பட்டவர்.
வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஏற்கனவே வடக்கு மாகாணத்தில் ஆளுநராக இருந்ததுடன் நிர்வாக ரீதியான விடயங்களிலும் அனுபமிக்கவர்.
அரசியல் ரீதியான காரணங்களுக்காக ஆளுநர்கள் மாற்றம் செய்யப்பட்டாலும் கூட இவ்வாறான அனுபவங்கள் கொண்டவர்களை நியமிக்கும் போது அதனை சிறப்பாக செய்ய முடியும் – என்றார்.