தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச...
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை, அதைத் தொடர்ந்து அவரை அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்துச் சென்ற போது ஏற்பட்ட நெஞ்சுவலி, மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருவது, நீதிமன்றத்தில் வாதம் என இந்திய அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அங்கு ஐசியுவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. செந்தில்பாலாஜி இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் 3 அடைப்புகள் உள்ளதாகவும், விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் மருத்துவமனை பரிந்துரைத்துள்ளது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ள நிலையில் புழல் சிறை அதிகாரிகள் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்துள்ளனர். நீதிமன்ற காவலில் இருப்பதால் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிறைத்துறை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் இருந்து துணை ராணுவ பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய புலனாய்வுத் துறை (CBI)க்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பு மாநில அரசின் முன் அனுமதியை பெறுவது அவசியம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ எந்த மாநிலங்களில் விசாரணை நடத்துவதாக இருந்தால் அதற்கு அந்தந்த மாநில அரசுகளின் முன் அனுமதி பெற வேண்டும் என 1946 டில்லி சிறப்பு காவல் அமைப்பு சட்டம் பிரிவு 6-ல் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த 1989,1992ம் ஆண்டில் இந்த சட்டப்பிரிவின் கீழ் சில வகை வழக்குகளுக்கென வழங்கப்பட்டு இருந்த பொதுவான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற ஆணையிடப்பட்டுள்ளது.இனி புலனாய்வு அமைப்பு தமிழ்நாட்டில் விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது போன்ற ஆணையை மேற்குவங்கம், ராஜஸ்தான், கேரளா, மிசோரம், பஞ்சாப், தெலுங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் பிறப்பித்துள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு முதல்வர் மு.க ஸ்டாலினை சீண்டியுள்ளார். அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், முந்தைய திமுக ஆட்சியின் போது மெட்ரோ ரயில் திட்ட ஒப்பந்தத்திற்காக ரூ. 200 கோடி பெற்றுக் கொண்டார் என்று, தமிழக பாஜக கடந்த ஏப்ரல் மாதம் குற்றம் சாட்டியிருந்தது. இன்றைக்கு தமிழக அரசின் அனுமதியில்லாமல் சிபிஐ விசாரணை நடத்த முடியாது என்று ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதைப் பார்க்கும்போது, சிபிஐ விரைவில் தனது வீட்டிற்கு விசாரணைக்கு வரும் என்ற அச்சத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் இருப்பதைப் போல் தெரிகிறது” என்று தெரிவித்துள்ளார்.