குறைந்த மொத்த எண்ணிக்கை பெறப்பட்டதும் 39 ஓவர்களுக்குள் பகல்போசன இடைவேளைக்கு முன்னரே நிறைவுபெற்றதுமான தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ஒருநாள் க...
குறைந்த மொத்த எண்ணிக்கை பெறப்பட்டதும் 39 ஓவர்களுக்குள் பகல்போசன இடைவேளைக்கு முன்னரே நிறைவுபெற்றதுமான தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ்தானை 9 விக்கெட்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது.
இதன் மூலம் ஹம்பாந்தோட்டை சூரியவவ மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் நடைபெற்றுவந்த 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை 2 - 1 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் 6 விக்கெட்களால் தோல்வி அடைந்த இலங்கை, 2ஆவது போட்டியில் 132 ஓட்டங்களால் வெற்றிபெற்றிருந்தது.
கடைசிப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 22.2 ஒவர்களில் 116 ஓட்டங்களுக்கு கட்டுப்படுத்திய இலங்கை, 16 ஓவர்களில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 120 ஓட்டங்களைப் பெற்று அபார வெற்றியீட்டியது.
ஐசிசி உலகக் கிண்ண தகுதிகாண் சுற்று ஆரம்பமாவதற்கு 11 தினங்கள் உள்ள நிலையில் இந்தத் தொடர் வெற்றி இலங்கைக்கு மிகுந்த நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
ஆரம்ப வீரர்களான பெத்தும் நிஸ்ஸன்க, திமுத் கருணாரட்ன ஆகிய இருவரும் அரைச் சதங்கள் குவித்ததுடன் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை இலகுபடுத்தினர்.
அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய பெத்தும் நிஸ்ஸன்க 34 பந்துகளில் 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்களுடன் 51 ஓட்டங்களைப் பெற்றார்.
திமுத் கருணாரட்ன 7 பவுண்டறிகளுடன் 56 ஓட்டங்களைப் பெற்று ஆட்டம் இழக்காதிருந்தார்.
குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 11 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் குல்பாதின் நய்ப் 19 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த ஆப்கானிஸ்தான் மிக மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 22.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 116 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.
இலங்கை வேகப்பந்துவீச்சாளர் துஷ்மன்த சமீர 63 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் முதல் 4 ஓவர்களை சிறப்பாக வீசி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தியபோதிலும் அடுத்த 5 ஓவர்களில் 39 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
எவ்வாறாயினும் தனது மீள் வருகையில் மொத்தம் 6 விக்கெட்களைக் கைப்பற்றிய துஷ்மன்த சமீர தொடர்நாயகனாகத் தெரிவானதுடன் கடைசிப் போட்டியில் ஆட்ட நாயகனாகவும் பெயரிடப்பட்டார்.
ஏனைய பந்துவீச்சாளர்களில் வனிந்து ஹசரங்க ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4.2 ஓவர்களில் 7 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்களைக் கைப்பற்றியதுடன் லஹிரு குமார 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார். மஹீஷ் தீக்ஷன 16 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினார்.
ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தில் மொஹமத் நய்ப் (23), இப்ராஹிம் ஸத்ரான் (22), குல்பாதின் நய்ப் (20) ஆகிய மூவரே 20 ஓட்டங்கள் அல்லது அதற்கு மேல் பெற்றனர்.