பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தனக்கு அறிவித்...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக உயர் பொலிஸ் அதிகாரி தனக்கு அறிவித்தார் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் அறிவித்தார்.
முன்னதாக எழுந்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ,
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி,பாராளுமன்றத்துக்கு வருகை தந்துகொண்டிருந்த போது இன்று (07) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரை அவ்வாறு கைது செய்யமுடியாது. இதுதொடர்பில் முன்னாள் சபாநாயகர் சமல்ராஜபக்ஷ தீர்ப்பொன்றை வழங்கியுள்ளார் என்றுகூறிய சஜித் பிரேமதாஸ, ஆகையால், அவரை விடுதலைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையே எழுந்த எதிர்க்கட்சி பிரதம கொறாடாவான லக்ஷ்மன் கிரியெல்ல எம்.பி,கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு, அமைச்சவை பாதுகாப்பு அதிகாரிகளோ, பொலிஸாரே இல்லை. அவர், தன்னுடைய சாரதியுடன் மட்டும் தான், பயணிக்கின்றார். எனினும், ஏனையோருக்கு எட்டு, ஒன்பது பொலிஸாரும் அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரிகளும் கடமையில் இருகின்றனர். கைது செய்யப்படுவதற்கு முன்னர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தன்னுடன் தொலைபேசியில் உரையாடினார். ஆகையால், இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுக் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன,பொலிஸ் உயர் அதிகாரியும், கஜேந்திர குமார் பொன்னம்பலமும் என்னுடன் கலந்துரையாடினர். கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த விருப்பதாக என்னிடம் பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார். பொலிஸாரின் கடமைக்கு நாங்கள் இடையூறு விளைவிக்க முடியாது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.