யாழ். மேல்நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இவ்வருடம் 2023ஆம் ஆண்டு யாழ். வீரமாகாளி அம்மன் ஆலய மகோற்சவத்தை நடத்த வேண்டிய பிரதம குரு நான் தான் என ...
யாழ். மேல்நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் இவ்வருடம் 2023ஆம் ஆண்டு யாழ். வீரமாகாளி அம்மன் ஆலய மகோற்சவத்தை நடத்த வேண்டிய பிரதம குரு நான் தான் என வீரமாகாளி அம்மன் ஆலய பிரதம குரு ராஜ ஸ்ரீ சிவ கமல் ராஜ் குருக்கள் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (16.06.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், அண்மையில் குறித்த ஆலய மகோற்சவம் தொடர்பில் ஊடகங்களில் வெளிவந்த செய்தி தொடர்பில் தெளிவுபடுத்தும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஒன்பதாம் திகதி குறித்த ஆலயத்தில் இடம்பெற இருந்த கொடியேற்ற நிகழ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் எட்டாம் திகதி ஆரம்பமாகி இடம்பெற்றுக் கொண்டிருந்தது.
திருவிழாவை நடத்துவதற்கு உரித்துடையவர்கள்
அன்றிரவு ஆலய சூழலில் இடம் பெற்ற வேண்டத்தகாத செயற்பாடுகள் காரணமாக ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வுகள் தடைப்பட்டமை யாரும் அறிந்ததே.
இவ்வருட பெருந்திருவிழாவை 17.05.2023 யாழ். மேல் நீதிமன்றம் வழங்கிய கட்டளையின் பிரகாரம் நான் செய்வதற்குரிய ஏற்பாடுகள் வழங்கப்பட்டது.
இந்நிலையில் பெருந்திருவிழாவுக்கான ஏற்பாடுகளைக் கடந்த 21ஆம் திகதியிலிருந்து பல இலட்சம் ரூபாய் செலவில் ஆரம்பித்தேன்.
இதனை விரும்பாத சிலர் கடந்த ஆறாம் திகதி யாழ். மாவட்ட நீதிமன்றத்தில் புதிதாக ஒரு வழக்கைத் தாக்கல் செய்து தாங்கள்தான் இவ்வருட பெருந் திருவிழாவை நடத்துவதற்கு உரித்துடையவர்கள் என்ற அடிப்படையில் நகர்வுகளை மேற்கொண்டார்கள்.
பூஜை வழிபாடுகள்
ஏழாம் திகதி நீதிமன்ற கட்டளையை வழங்குவதற்காக எனது வீட்டுக்கு நீதிமன்றத்தில் இருந்து வருகை தந்த நிலையில் அப்பா வீட்டில் இல்லை கொழும்பில் நிற்கிறார் என எனது மகன் பதிலளித்தார்.
மீண்டும் மறுநாள் வந்தார்கள் அப்போதும் எனது மகன் முதல் நாள் கூறிய பதிலையே அவர்களிடம் கூறினார் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால் ஆறாம் திகதி வழக்குக்கு எனது அப்பா கொழும்பில் நிற்பதன் காரணமாக வர முடியவில்லை என நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தப்பட்டிருக்கிறது என மகன் கூறினார்.
மறுநாள் நகர்த்தல் பத்திரம் ஒன்றின் ஊடாக நீதிமன்ற கட்டளையை எனது வீட்டில் ஓட்டுவதற்கான அனுமதியைப் பெற்று எனது வீட்டாருக்குத் தெரிவிக்காமல் வீட்டில் ஒட்டியுள்ளனர்.
கொடியேற்றத்துக்கு முதல் நாள் 8 ஆம் திகதி பூஜை வழிபாடுகள் ஆலயத்துக்குள் இடம்பெற்றுக் கொண்டிருந்த வேளை சில பெண்களுடன் வந்த ஒரு தரப்பினர் ஆலய பிரதான கதவினை நாங்கள் கொண்டு வந்த பூட்டினால் பூட்டியுள்ளனர்.
யாழ்.வீரமாகாளி அம்மன் ஆலய மகோற்சவ குரு நானே: ராஜ ஸ்ரீ சிவ கமல்ராஜ் குருக்கள் | Jaffna Veeramakali Amman Temple
ஆலயத்தின் கொடியேற்றம்
ஆலயத்தில் இடம்பெறும் மோசமான நிலைமைகள் எனது வீட்டார் தொலைபேசி மூலம் தெரியப்படுத்திய நிலையில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பை ஏற்படுத்தி தகவல்களை வழங்கினேன் பொலிஸாரும் வருகை தந்தார்கள்.
அன்று 8 ஆம் திகதி 9 மணி அளவில் கொழும்பில் இருந்த நான் ஆலய சூழலுக்கு வருகை தந்த போது குழப்பமான சூழ்நிலை இருப்பதை அவதானித்த நிலையில் அங்கு நின்ற பொலிஸாரிடம் என்னிடம் இருந்த மேல் நீதிமன்ற கட்டளைக் காட்டி பெரும் திருவிழாவை நடத்துவதற்குப் பாதுகாப்பு தருமாறு கேட்டேன்.
9ஆம் திகதி இரவு 9 மணிவரை கேட்ட பொலிஸ் பாதுகாப்பு திடீரென 8ஆம் திகதி மாலை 5 மணியளவில் நீக்கப்பட்டது.
பொலிஸ் பாதுகாப்பு நீக்கப்பட்ட நிலையில் வளாகத்துக்குள் அதிகளவானோர் ஒன்று கூடிய நிலையில் நிலைமைகளை அவதானிப்பதற்காக எதிர்த் தரப்பைச் சேர்ந்தவர்களின் சட்டத்தரணியும் காரில் அவ்விடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை அவதானித்துக் கொண்டிருந்தார்.
மாலை வேளை குழப்பம் ஏற்பட்ட நிலையில் பொலிஸார் ஆலய பிரதான கதவின் திறப்பினை பூட்டி மறுநாள் பொலிஸ் நிலையம் வருமாறு கூறிச் சென்ற நிலையில் ஆலயத்தின் கொடியேற்ற நிகழ்வும் தடைப்பட்டது.
கட்டளை பிறப்பிக்கவில்லை
சில ஊடகங்கள் நான் திறப்பை எடுத்துச் சென்றதால் தான் பெரும் திருவிழா தடைப் பட்டதாகவும் குழப்பங்களுக்கு நான் தான் காரணம் என்ற கருத்துப்படி செய்திகளை வெளியிட்டன.
செய்திகளை வெளியிடும்போது சில ஊடகங்கள் ஒரு தரப்பினரின் கருத்துக்களைப் பதிவிடுகின்ற நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றைய தரப்பினரிடமும் கருத்துக்களைக் கேட்டிருக்க வேண்டும்.
சில ஊடகங்களில் ஆலய திறப்பை வழங்குமாறு நீதிமன்றம் கூறியதாகவும் நான் வழங்கவில்லை எனக் கூறப்பட்டது.
எனக்கு அவ்வாறு கட்டளை பிறப்பிக்கவில்லை, அவ்வாறு பிறப்பித்திருந்தால் நானாகவே ஆலயத் திறப்புக்களை ஒப்படைத்திருப்பேன்.
அல்லது மாற்றுத் தரப்பினரிடம் நீதிமன்ற கட்டளை இருந்திருந்தால் எவ்வாறு ஆலயத்தை உடைத்தார்கள் எனக் கேட்க விரும்புகிறேன்.
திறப்பு என்னிடம் இருந்த நிலையில் ஆலயம் உடைக்கப்பட்டதால் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் காணாமல் போயுள்ளது.
சட்டத்தை மதிக்கின்றேன் என்ற நிலையில் மேல் நீதிமன்ற கட்டளையின் பிரகாரம் நான் தான் கொடியேற்ற வேண்டும் ஆனால் அவ்வாறு இடம்பெறவில்லை.
ஆகவே எனது விடயத்தில் இடம்பெற்ற சட்டத்துக்கு முரணான நடவடிக்கை தொடர்பில் உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி பரிகார நீதி பெறப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.