ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கோர ரயில் விபத்து ஏற்பட்டு நாட்டையே அதிர...
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே கடந்த 2ஆம் தேதி இரவு 7 மணி அளவில் கோர ரயில் விபத்து ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் மொத்தம் 3 ரயில்கள் விபத்துக்குள்ளானதில் 288 பேர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது. இந்த கோர விபத்தில் பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத வகையில் இருந்தன. என்றாலும் விபத்து நடந்த இடத்தில் இருந்து உடல்கள் அப்புறப்படுத்தப்பட்டு அருகே உள்ள இடங்களில் கொண்டுபோய் வைக்கப்பட்டன. அதில் அருகில் இருந்த மிகவும் பழமையான, பாஹாநாகா அரசு உயர்நிலைப்பள்ளியும் அடக்கம். அங்குதான் இறந்தவர்களின் குடும்பத்தினர், உடல்களை அடையாளம் கண்டு, திரும்பப் பெற்றுக்கொள்ளும் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. பின்னர் அவ்வுடல்கள் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அப்பள்ளிக்கு வந்து பயில்வதற்கு மாணவர்கள் அஞ்சுவதாகத் தெரிவித்துள்ளனர்.
இடிக்கப்படும் ஒடிசா பள்ளி
அந்தப் பள்ளி கோடை விடுமுறை முடிந்து விரைவில் திறக்கப்படவுள்ளது. ஆனால், பிணங்களைக் குவியல்குவியலாக வைக்கப்பட்டிருந்த இடம் என்பதால் அந்தப் பள்ளிக்கு வர மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் அச்சப்படுகின்றனர். அங்கு உயிரிழந்தவர்களின் ஆவிகள் உலாவுமோ எனப் பலரும் பீதியில் உள்ளனர். இதனால், பள்ளிக்கூடத்தை இடித்து புதிதாகக் கட்டினால்தான் வருவோம் என பெற்றோர் தரப்பு கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, புதிய கட்டடத்திற்காக மாநில அரசின் அனுமதியை கோரியுள்ளதாகப் பள்ளியின் தலைமை ஆசிரியை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாலசோர் மாவட்ட ஆட்சியர் தத்தாத்ராயா பௌசாஹேப் ஷிண்டே பள்ளிக்குச் சென்று பார்வையிட்டார். ”பள்ளியை பார்வையிட்டு, தலைமை ஆசிரியை, பள்ளி நிர்வாகக் குழு, ஆசிரியர்கள் மற்றும் அந்தப் பகுதி மக்கள் ஆகியோர் இதுகுறித்து பேசினோம். அவர்கள், மாணவர்கள் பள்ளியிக்கு வர அஞ்சுவதாகவும், பள்ளியின் கட்டடத்தை இடித்துவிட்டு புதியதாக கட்ட கோரிக்கை வைத்துள்ளனர். கட்டடம் குறித்து குழு தீர்மானம் சமர்ப்பித்தால் பள்ளி இடிக்கப்படும்” என்றார். அக்குழு தீர்மானத்தைச் சமர்ப்பித்ததைத் தொடர்ந்து இடிப்பு பணி தொடங்கியுள்ளது.
இதுகுறித்து பள்ளி ஆசிரியர் ஒருவர், “கலெக்டர் முந்தைய நாள் கட்டடத்தைப் பார்வையிட்டார். “பயப்பட ஒன்றுமில்லை. இங்கு ஆவிகள் இல்லை. அது வெறும் மூடநம்பிக்கை. என்றாலும் அந்த பழைய கட்டடம் அகற்றப்பட்டு, புதிதாய்க் கட்டப்படும்'' என்றார்.
பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜாராம் மொஹபத்ரா, ”உடல்கள் வைக்கப்பட்டிருந்த அறைகள் சுத்தப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் மாணவர்களும் அவர்களது பெற்றோரும் பயத்தில் உள்ளனர். புதிய கட்டடம் தயாரானதும், குழந்தைகள் பயப்படாமல் இருக்க சடங்குகள் செய்யப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, அப்பள்ளிக் கட்டடத்தில் இடிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்த வீடியோக்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.