பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தமிழன் என்பதாலா சட்டவிரோதமான கைது முன்னெடுக்கப்பட்டது எனவும் வேறு வேறு கட்சிகளாக இருந்தாலும் அரசின் எதே...
பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் தமிழன் என்பதாலா சட்டவிரோதமான கைது முன்னெடுக்கப்பட்டது எனவும் வேறு வேறு கட்சிகளாக இருந்தாலும் அரசின் எதேச்சதிகார நடவடிக்கைகளுக்கு எதிராக ஒருமித்து குரல்கொடுப்போம் என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார்.
பாராளுமன்ற கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்யப்பட்டமை தொடர்பில் திருகோணமலை மாவட்டத்தில் இன்று ஊடகவியலாளர்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை சட்டவிரோதமாக கைது செய்வது என்பது பொதுமக்களை இவர்கள் எவ்வாறு நடத்துவார்கள் என்பதனை எடுத்துக்காட்டக் கூடியதாக காணப்படுகிறது. சபாநாயகரினுடைய சில கருத்துக்களை மீறியும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருடைய சிறப்புரிமை மீறல் என்பது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. இங்கு சபாநாயகருக்கு அறிவிக்கப்பட வேண்டிய விடயங்கள் அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதைகளை இந்த பொலிசார் வழங்க மறுத்தமை பழைய அரசாங்கத்தினுடைய இயல்பினை நமக்கு மீளவும் நினைவூட்டுகின்றது.
பேச்சு சுதந்திரம் கருத்து சுதந்திரம் தற்பொழுது உறுதிப்படுத்தப்படுவதாக இந்த அரசாங்கத்தினால் வெளிப்படுத்தப்பட்டாலும் இங்கே அவை ஒரு பேசுபொருளாகவே காணப்படுகின்றன.இது சமூகங்களை ஒன்றிணைக்க வேண்டும் அதன் மூலம் நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறுகின்ற அதே நேரம் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரை பாகுபாட்டுடன் இந்த பொலிசார் நடத்துவதை அவர் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். அது நடைபெறாமல் தடுத்திருக்க வேண்டும்.
கொள்ளுப்பட்டியிலே ஒரு கள்வனை போய் கைது செய்வதனை போல இந்த பொலிசார் ஒரு பாராளுமன்ற உறுப்பினருடன் நடந்து கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே மருதங்கணி பொலிசார் கஜேந்திரகுமார் வாக்குமூலம் வழங்கும்படி கூறிய பொழுது தான் பாராளுமன்ற அமர்வில் கலந்தபின் நேரடியாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு வந்து வாக்குமூலம் தருவதாக தெரிவித்திருந்தார். ஆனால் பாராளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்காக தன்னுடைய கொள்ளுபிட்டியில் இருக்கக்கூடிய வீட்டுக்கு பாராளுமன்ற உறுப்பினர் வருகை தந்த நிலையில் பொலிசார் வேறுவிதமாக அவரை நடத்தியுள்ளார்கள்.
காவல்துறையினருக்கு அப்பால் மேலிடத்திலிருந்து தான் இவர்களுக்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இருக்க வேண்டும். காவல்துறையினருக்கு பாராளுமன்ற உறுப்பினர் யார்? சபாநாயகர் யார்? என தெரிந்து அவர்கள் கௌரவமாக நடத்தி இருக்க வேண்டும். ஆனால் இங்கே பின்னணியில் பாரிய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளன ஒரு பிழையான வழிநடத்தலை இந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனுமதித்திருக்கின்றார்.
ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கென சிறப்புரிமை காணப்படுகின்றது பாராளுமன்றத்தில்கூட ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இழிவான சொல்களை பாவித்தால் கூட அவர்களுக்குரிய விசாரணைகள் மிக ஒழுங்கான முறையில் இடம் பெறுவது வழக்கம் இங்கே என்ன நடந்தது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை கள்வனை போல நடத்தி இருக்கின்றார்கள் கஜேந்திரகுமார் தமிழன் என்பதாலா? அல்லது அவர் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணத்தினாலா? இந்த கைது முன்னெடுக்கப்பட்டது என்று நாம் ஆராய வேண்டும் இதனை சும்மா விட முடியாது மக்கள் விழித்தெழ வேண்டும்.
வேறு வேறு கட்சிகளாக இருக்கலாம் இவ்வாறான சட்டவிரோதமான நடவடிக்கைகள் யாருக்கு ஏற்பட்டாலும் நாம் பார்த்துக் கொண்டே இருக்க முடியாது. இதற்கு எதிராக கிளர்ந்து எழ வேண்டியது அனைவருடைய கடமையாகும். நான் இங்கு கூற விரும்புவது யாதெனில் இந்த நாட்டில் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமை இருக்க வேண்டும் எனில் காவல்துறையினர் திறன் பட ஒழுங்காக செயற்பட வேண்டும். இவர்களுடைய இவ்வாறான செயற்பாடுகள் மக்கள் விலகி விலகி செல்வதற்கான சூழலை உருவாக்குகின்றார்கள் . இவ்வாறான செயற்பாடுகள் பெரும்பான்மையினத்தவர் மீதான தொடர்ச்சியான எரிச்சல் மிகுந்த மனப்பான்மை தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் இதற்கு முழு முழு காரணகர்த்தாவாக பாதுகாப்பு அமைச்சினை சேர்ந்தவர்கள் காணப்படுகின்றார்கள். இதை தடுத்திருக்க வேண்டிய ரணில் விக்கிரமசிங்க அதனை பார்த்துக் கொண்டிருந்தமையால் அவர் எதிர்பார்க்கின்ற நல்லிணக்கம் தொடர்பாக பேசுவதற்கு யோசிக்க வேண்டிய சூழலை உருவாக்கி உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.