பலஸ்தீனத்தில் மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து எதிர்க் குரல் எழுப்புவதற்கு எவரும் – எந்த அமைப்பும் முன்வராதமையானது மிக...
பலஸ்தீனத்தில் மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து எதிர்க் குரல் எழுப்புவதற்கு எவரும் – எந்த அமைப்பும் முன்வராதமையானது மிகவும் வருந்தத்தக்க விடயம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மேலும், “பலஸ்தீனத்துடனான எனது நேரடித் தொடர்புகள் 1978ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது. எமது மக்களின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த அக் காலத்தில் நானும் பலஸ்தீனம் சென்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த காலம்.
1978ஆம் அங்கு சென்றிருந்த நான், பின்னர் பயிற்சிக்கென ஒரு குழுவினையும் அழைத்துக் கொண்டு, 1984ஆம் ஆண்டிலும் அங்கு சென்றிருந்தேன்.
அப்போதிலிருந்து அங்கிருக்கின்ற மக்களுடன், விடுதலை அமைப்புகளுடன் நிறைய அனுபவங்களைப் பெற்றிருக்கிறேன்.
அங்கே இருந்த காலங்களில் அவர்களது விடுதலைக்கான போராட்ட வடிவங்களைப் பார்த்து, இங்கும் போராட்ட வடிவத்தினை மாற்றியமைக்க வேண்டும் என எண்ணியிருந்தும், அப்போது அது சாத்தியப்படாமல் போய்விட்டது.
பின்னர் 1990களில் நான் இலங்கை திரும்பியதும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறைகளின் படியே எனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்திருந்தேன்.இங்கே, அக்காலத்திலேயே போராட்ட வடிவமானது திசைமாறிப் போய்க் கொண்டிருந்தது.
பலஸ்தீனத்துக்கு நான் பயிற்சிக்கு சென்ற காலம் முதற் கொண்டு, இன்று வரையில் பலஸ்தீனம் தொடர்பில் எனக்கு அதீதமான அக்கறை உண்டு.
1948ஆம் ஆண்டில் பலஸ்தீனம், இஸ்ரேல் ஆகிய நாடுகள் இரண்டாகப் பிரிக்கப்பட்டன. பிரிக்கப்பட்ட தினம் முதற் கொண்டு இஸ்ரேல் தனி நாடாகப் பிரகடனமாகியது. ஆனால், பலஸ்தீனமானது தனி நாடாக மாறுவதற்கென இன்று வரை தனது போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதற்கென பல்லாயிரக் கணக்கான மனித உயிர்களை காவு கொடுத்துள்ளது.
90 சத விகிதம் இஸ்லாமிய மக்கள் வாழ்ந்து வருகின்ற, மேற்குக் கரை மற்றும் காஸா என்ற இரு பகுதிகளைக் கொண்டதான பலஸ்தீனமானது, 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்சர்வர் ஸ்ரேட் என்கின்ற அந்தஸ்தைப் பெற்றுக் கொண்டது.
பலஸ்தீனத்திற்குரிய நிலங்களை அபகரிப்பது, இஸ்லாமிய மக்களை ஒடுக்குவது போன்ற இஸ்ரேலின் செயற்பாடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில்தான் இந்த மாதம் 03ஆம் திகதி பலஸ்தீனத்தின் மேற்குக் கரை பகுதியில் அமைந்துள்ள ஜெனின் நகரிலுள்ள பலஸ்தீன அகதி முகாம்கள் மீதான தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்டிருக்கிறது.
சுமார் 14 ஆயிரம் பேர் வரையில் தங்கக்கூடிய அகதி முகாம் மீது இரண்டு நாட்களாக தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், குறிப்பாக, நீர் மற்றும் மின்சார விநியோகங்கள், சுகாதார வசதிகள் வழங்கல் போன்ற முக்கிய இலக்குகள் நோக்கி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
2002ஆம் ஆண்டிலும் இந்த ஜெனின் முகாம் இஸ்ரேலியர்களால் தாக்கி அழிக்கப்பட்டது.
மேற்குக் கரைப் பகுதியிலிருந்து பலஸ்தீனியர்களை முழுமையாக விரட்டியடித்து, அப் பகுதியில் யூத இன மக்களைக் குடியமர்த்தி, அப் பகுதியை இஸ்ரேலுடன் இணைத்துக் கொள்கின்ற ஒரு திட்டம் இஸ்ரேலுக்கு இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அழித்து விடுவதன் மூலம் ஒரு சமூகத்தின் ஆணி வேரையே பிடுங்கி எறிகின்ற வகையிலான இத் தாக்குதலானது மனிதாபிமானமற்ற செயலாகும்.
மேற்படி தாக்குதலின்போது சிறுவர்கள் உட்பட 12 பேர் கொல்லப்பட்டதாகவும், சுமார் 100 பேர் வரையில் காயமடைந்துள்ளதாகவும், சுமார் 4000 பேர் தங்களது இருப்பிடங்களை இழந்துள்ளதாகவும், 300 பேர் வரையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் பலஸ்தீன செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாகத் தெரிய வருகின்றது.
இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இஸ்ரேலியர்களால் 26 சிறுவர்கள் உட்பட 170 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் அறிக்கையின்படி, இவ்வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் இஸ்ரேலியர்கள் மாதாந்தம் தலா 95 தாக்குதல்களை பலஸ்தீனத்தின் மீது நடத்தியுள்ளதாகவும், இதன்படி மொத்தம் 570 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
இத்தகைய தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு, மனித உயிர்கள் பலியாக்கப்படுகின்ற நிலையில் அது குறித்து எதிர் குரல் எழுப்புவதற்கு எவரும் – எந்த அமைப்பும் முன்வராதமையானது மிகவும் வருந்தத்தக்க விடயமாகும்.
யுத்த குற்றங்கள் என்ற வகையில் ஏனைய நாடுகள் மீது ஆவேசக் குரல்களை எழுப்புகின்ற சர்வதேச அமைப்புகள் இஸ்ரேலின் தாக்குதல்களின் போது மௌனம் சாதிக்கின்ற இயந்திரங்களாக மாறிவிடுகின்றன.” என்று தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று(18) நடைபெற்ற பலஸ்தீன மக்கள் முகங்கொடுத்து வருகின்ற அவலங்கள் தொடர்பான விவாதம் தொடர்பாக மேற்கண்டவாறு கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பலஸ்தீன மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலான விடயத்தினை நாடாளுமன்றத்திலே விவாதத்திற்கு எடுத்திருப்பதானது, அதிலே அரசியல் உள்நோக்கங்கள் இருந்தாலும், வரவேற்கத்தக்க விடயம் எனவும் தெரிவித்தார்.