முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவ...
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜா, கடந்த 2023.07.04 ஆம் திகதி தனது கடமை நிமித்தம் குருந்தூர்மலைக்கு விஜயம் செய்திருந்தபோது தெரிவித்த கருத்துகளை மேற்கோள்காட்டி 2023.07.07 ஆம் திகதி நாடாளுமன்றில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர, தமிழ் நீதிபதிகளின் அதிகாரப் பரப்பைக் கேள்விக்குட்படுத்தியுள்ளமை கடும் கண்டனத்திற்குரியது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
நேற்றைய நாடாளுமன்ற அமர்வில் (18) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவரது இன்றைய நாடாளுமன்ற உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
தமிழ் நீதிபதிகள் தமது அதிகார வரம்புக்குட்பட்டு நியாயமான தீர்ப்புகளை வழங்கமுடியாதென்ற நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகரவின் கருத்துகள் சரியானவை என்றால், இந்தநாட்டின் நீதித்துறையை முழுமையாக சிங்களமயப்படுத்தப் போகிறீர்களா? என்று கேள்வி எழுப்பிய சிறீதரன், உரிய அதிகாரங்கள் தடுக்கப்பட்டு, தமிழ் நீதிபதிகளும், நீதிமன்றத் தீர்ப்புகளும் தொடர்ச்சியாக அவமதிக்கப்படுகின்றமை இந்த நாட்டின் அகோரமான இனவாதச் செயலாகவே தென்படுகிறது என்றும் கடுமையாகச் சாடியுள்ளார்.
கடந்த 04ம் திகதி குருந்தூர் மலைக்குச் சென்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் சரத்வீரசேகர தலைமையிலான இனவாதக் குழுவினரும், குருந்தூர்மலை ஆதிசிவன் ஆலயத்தில் கடந்த 14ம் திகதி பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்ட பொதுமக்கள்,குறிப்பாக பெண்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் மீது பொலிஸார் மேற்கொண்ட அடாவடித்தனங்களும், 1905ஆம் ஆண்டு குருந்தூர்மலையில் நிகழ்ந்த ஆய்வுகளிலேயே, அம்மலையில் சதுர ஆவுடையாரைக் கொண்ட சிவலிங்கமும், நந்தியும் காணப்பட்டதென மிகத்துல்லியமாக எண்பிக்கும் வரலாறுகளை அடியோடு மறுத்து, அடாத்தாக அவ்விடத்தில் விகாரை அமைத்ததோடு, தமிழர்களின் வழிபாட்டுரிமைகளைப் பறிப்பதும் இன நல்லிணக்கத்தைக் கேள்விக்குட்படுத்தி, இந்த நாட்டின் மிகமோசமான இனவாத முகத்தை தோலுரித்துக் காட்டுவதாகவே அமைந்துள்ளது.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி சரவணராஜாவின் கருத்துகளை மறுதலித்து, இந்த உயரிய சபையில் சரத்வீரசேகர பதிவுசெய்த இனவாதக் கருத்துகளுக்கு எனது வன்மையான கண்டனங்களைத் தெரிவிக்கிறேன் என்றும், தயவுசெய்து இந்த நாட்டின் நீதித்துறையையாவது சுயாதீனமாக இயங்கவிடுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார்.