முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடமாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் ம...
முல்லைத்தீவு நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடமாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் முல்லைத்தீவில் இன்று ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறிப்பாக வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களைச் சார்ந்த சட்டத்தரணிகள் நீதிபதி சரவணராஜா விடயத்திற்கு நீதிகோரியும், நீதித்துறையின் சுயாதீனத் தன்மை மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாக்க வலியுறுத்தியும் முல்லைத்தீவு நீதிமன்றிலிருந்து, பதாதைகளைத் தாங்கியவாறும், கோசங்களை எழுப்பியும் பேரணியாகப் புறப்பட்டு முல்லைத்தீவு பிரதான சுற்றுவட்டப்பாதையைச் சென்றடைந்தனர்.
பின்னர் முல்லைத்தீவு நகர பிரதான சுற்றுவட்டப் பாதை வளாகத்தில் சிறிதுநேரம் கோசங்களை எழுப்பி ஆர்ப்பட்டத்திலும் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அங்கிருந்து தமது கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கி பேரணியாக மீண்டும் முல்லைத்தீவு நீதிமன்ற வளாகத்தினை வந்தடைந்து அங்கு அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகள் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்துகொள்வதாக ஏற்கனவே வழங்கப்பட்ட அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவர்கள் இந்த ஆர்ப்பாட்டப்பேரணியில் கலந்துகொள்ளவில்லை.
இருப்பினும் கிழக்கு மாகாணத்தில் அந்தந்த நீதிமன்றங்களுக்கு முன்பாக சட்டத்தரணிகளால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களும், பணிப்பகிஸ்கரிப்பும் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.
அத்தோடு யாழ்ப்பாணத்தில் நாளை இடம்பெறும் மனிதச் சங்கிலிப்போராட்டத்திற்கு ஆதரவு வழங்க வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை (07)ஆம் திகதி வடமாகாணம் முழுவதும் வெகுஜன அமைப்புக்களால் முன்னெடுக்கப்படவுள்ள ஆர்பாட்டப் பேரணிக்கும் கடையடைப்பிற்கும், வடமாகாண சட்டத்தரணி சங்கம் பூரணமான ஒத்துழைப்பினை வழங்கும் வகையில் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொள்வதுடன், அந்தந்த மாவட்டங்களில் வெகுஜன அமைப்புக்களால் முன்னெடுக்கப்படும ஆர்ப்பாட்டங்களிலும் சட்டத்தரணிகள் சங்கத்தினர் கலந்துகொள்ளவும் தீர்மானித்துள்ளனர்.
அதேவேளை முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினர் தொடர்ச்சியாக காலவரையறையற்ற நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுவருவதெனவும், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகள் இரு வாரங்களுக்கு, கறுப்பு முகக்கவசம் அணிந்து நீதமன்ற வழக்குகளில் தோன்றுவதற்கும் தீர்மானித்துள்ளனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர் இரத்தினம் ஜெகதீசன், சமூக செயற்பாட்டாளர் அன்ரனி ஜெயநாதன் பீற்றர் இளஞ்செழியன் ஆகியோர் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.