இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக...
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய கடற்றொழிலாளர்களை தொடர்ந்தும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி யாழ் மாவட்ட செயலக வாயிலை மூடி இன்று வெள்ளிக்கிழமை யாழ் மாவட்ட மீனவ அமைப்புகள் ஒன்றிணைந்து போராட்டத்தை முன்னெடுத்தன.
இந்திய மீனவர்களே எமது கடல் வளங்களை அழிக்காதே, கடற்படையே அத்துமீறிய இந்தியா மீனவர்களை கைது செய்,கடற்றொழில் அமைச்சரே ஜனாதிபதியே எமது கோரிக்கைகளை நிறைவேற்று என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மீனவர்கள் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபனிடம் ஜனாதிபதி மற்றும் கடற்றொழில் அமைச்சரை அனுப்புவதற்கான மஜர்களை கையளித்தனர்.
குறித்த மஜகரில் தெரிவிக்கப்பட்டதாவது,
அத்துமீறி எல்லை தாண்டி இலங்கை கடற்பரப்பினுள் நுழைகின்ற இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் பரப்பில் சட்ட விரோதமான இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமை தாங்கள் அறிந்ததே.
இதன்காரணமாக. வடக்கு மாகாணம் கடற்றொழிலாளர்களாகிய எங்களின் வாழ்வாதாரமும் எமது கடல் வளங்களும் அழிக்கப்படும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.
தொடர்ச்சியாக, எங்களது கடல் பரப்பில் நுழைகின்ற நூற்றுக்கணக்கான இந்திய ரோலர் வருகையால் மீன் உற்பத்திக்கு ஏதுவான பவளப் பாறைகள் அழிக்கப்படுகின்றன.
இதனால் எதிர்காலத்தில் எமது கடற்பரப்பில் கடலுணவுகள் அழிந்து போகும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் மக்களுக்கு தேவையான புரதச்சத்தை பெற்றுக் கொள்ள முடியாத நிலை உருவாகி வருகின்றது.
இந்த நிலை தொடருமானால் கற்றொழிலையே வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்த்து வருகின்ற வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்காலத்தில் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும்.
இது தொடர்பாக, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்புரைக்கு அமைவாக கடற்றொழில்” திணைக்களத்தினரும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்ற போதிலும், கடற்படையினரும் பல்வேறு அவை போதுமான விளைவை ஏற்படுத்தவில்லை என்பதே தமிழ் பேசும் கடற்றொழிலாளர்களாகிய எமது ஆதங்கமாகும்.
நாங்கள் எதிர்கொள்ளும் அவலங்களை தமிழக மக்களுக்கும், தமிழக தலைவர்களுக்கும் எடுத்துரைத்து, இந்த விவகாரம் தொடர்பான உண்மைளையும், புரிதலையும் அவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.