2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத...
2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று நண்பகல் 12.00 மணிக்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
இந்த நாட்டின் 78வது வரவு செலவுத் திட்டமே சமர்ப்பிக்கப்படவுள்ளது.
வரவு செலவுத் திட்டத்தின் இறுதிக் கட்டத் தயாரிப்பு மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பான கலந்துரையாடலில் ஜனாதிபதி நேற்று (12) தனது உத்தியோகபூர்வ இல்லத்தில் கலந்து கொண்டார்.
இதில் நிதியமைச்சர்கள், மத்திய வங்கியின் ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவும் கலந்துகொண்டனர்.
2024 ஆம் ஆண்டிற்கான மதிப்பிடப்பட்ட அரசாங்கச் செலவு 7,326 பில்லியன் ரூபாவாகும்.
5,334 பில்லியன் ரூபாய்கள் தொடர்ச்சியான செலவுகள் அல்லது மானியங்கள் மற்றும் சம்பளம் போன்ற செலவுகளுக்காக ஒதுக்கப்படவுள்ளது.
மூலதனச் செலவு அல்லது புதிய திட்டங்கள் அல்லது ஏற்கனவே உள்ள திட்டங்களுக்கான செலவு 1,225 பில்லியன் ரூபாய்கள் எனக் கூறப்படுகிறது.
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 14ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை 7 நாட்களுக்கு நடைபெறும்.
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் மாதம் 21ஆம் திகதி நடைபெறும்.
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 13ஆம் வரை 19 நாட்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான வாக்கெடுப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் 13ஆம் திகதி மாலை 06:00 மணிக்கு நடைபெறும்.
பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இன்றைய தினம் கொண்டுவரப்படவுள்ள வரவு செலவுத் திட்டம் தொடர்பில் நாட்டின் பல துறைகளைச் சேர்ந்த தரப்பினர்கள் உன்னிப்பாக அவதானம் செலுத்தி வருகின்றனர்.