முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை சட்டவிரோதமானது...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை சட்டவிரோதமானது என இலங்கையின் உச்ச நீதிமன்றம் ஏகமனதாக தீர்ப்பளித்துள்ளது.
2011 ஆம் ஆண்டு பரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர படுகொலை செய்யப்பட்டமைக்காக துமிந்த சில்வா உள்ளிட்ட ஜவர் 2016 ஆம் ஆண்டு உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டனர்.
ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது, இந்த தீர்ப்பை உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதி செய்தது.
எவ்வாறாயினும், 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து, கோட்டாபய ராஜபக்ச துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கினார்.
இந்த பொது மன்னிப்பின் சட்டபூர்வமான தன்மையை எதிர்த்து மூன்று தனித்தனி அடிப்படை உரிமை மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது தாயார் சுமனா பிரேமச்சந்திர மற்றும் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் கசாலி ஹுசைன், ஆகியோரால் இந்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதனை பரிசீலித்த நீதியரசர்கள் பி.பத்மன் சூரசேன, காமினி அமரசேகர மற்றும் அர்ஜுன ஒபேசேகர ஆகியோர் அடங்கிய அமர்வு, பொது மன்னிப்புச் செயல்முறை பிழையானது என்றும், சட்டத்திற்கு புறம்பானது என்றும் ஒருமனதாக முடிவு செய்தது.